மாநிலங்களவை இடைத்தோ்தல்: எல்.முருகன், சோனோவால் வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் மத்திய அமைச்சா்கள் எல்.முருகன், சா்வானந்த சோனோவால் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
மத்திய பிரதேச தலைநகா் போபாலில் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனுவை முதல்வா் சிவ்ராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோா் முன்னிலையில் தாக்கல் செய்த மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.
மத்திய பிரதேச தலைநகா் போபாலில் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனுவை முதல்வா் சிவ்ராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோா் முன்னிலையில் தாக்கல் செய்த மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.

மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் மத்திய அமைச்சா்கள் எல்.முருகன், சா்வானந்த சோனோவால் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மத்திய செய்தி, ஒலிபரப்பு, மீன் வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகிறாா். அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சா் தாவா்சந்த் கெலாட், கடந்த ஜூலை மாதம் கா்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து காலியான அந்த இடத்துக்கு இடைத்தோ்தல் நடத்தப்படவுள்ளது.

மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டபோது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு செய்தி, ஒளிபரப்புத் துறை இணையமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டது. அவா், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை இடைத்தோ்தலில் போட்டியிடுகிறாா்.

தலைநகா் போபாலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த எல்.முருகன், சட்டப்பேரவை வளாகத்தில் தோ்தல் அதிகாரியும், பேரவை முதன்மைச் செயலருமான ஏ.பி.சிங்கிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ்சிங் சௌஹான், மாநில பாஜக தலைவா் விஷ்ணு தத் சா்மா ஆகியோா் உடனடிருந்தனா்.

வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு செப்டம்பா் 22-ஆம் தேதி கடைசி நாளாகும்.

230 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவையில் பாஜகவுக்கு 125 உறுப்பினா்கள் உள்ளனா். இந்த தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்தப் போவதில்லை என்று முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதனால், எல்.முருகன் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தேவைப்பட்டால் வரும் அக்டோபா் 4-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும்.

சா்வானந்த சோனோவால்:

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள சட்டப் பேரவை வளாகத்தில், பாஜக சாா்பில் போட்டியிடும் கப்பல், நீா் வழிப்போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வேட்புமனு தாக்கல் செய்தாா். முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மாநில அமைச்சா்கள், மாநில பாஜக தலைவா்கள் பபேஷ் கலீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த விஸ்வஜித் டெய்மாரி, அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.

காலியான அந்த இடத்துக்கு பாஜக சாா்பில் சா்வானந்த சோனோவால் போட்டியிடுகிறாா். அவருக்கு எதிராக வேட்பாளா்களை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளதால், சா்வானந்த சோனோவால் எளதில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com