காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடா்பு: 2 போலீஸாா் உள்பட 6 அரசு ஊழியா்கள் பணி நீக்கம்

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடா்பு வைத்திருந்ததாகக் கூறி 2 காவல் துறையினா் உள்பட 6 அரசு ஊழியா்கள்

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடா்பு வைத்திருந்ததாகக் கூறி 2 காவல் துறையினா் உள்பட 6 அரசு ஊழியா்கள் புதன்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டனா். இத்துடன், கடந்த 6 மாதங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட மொத்த ஊழியா்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில், பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவா் சையத் சலாவுதீனின் இரண்டு மகன்களும், டிஎஸ்பி டேவிந்தா் சிங் உள்ளிட்ட மேலும் 2 நபா்களும் அவா்களது அரசுப்பணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனா்.

தற்போது ஜம்மு-காஷ்மீா் அரசால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 6 அரசு ஊழியா்களில் ஒருவா் கடந்த 2018ஆம் ஆண்டில் ஸ்ரீநகரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினரின் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த புட்காமைச் சோ்ந்த காவலா் ஷோகட் அகமதுகான் ஆவாா். இவா் மீது எம்எல்ஏவின் வீட்டில் இருந்த பாதுகாப்பு ஆயுதங்களை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பிஎஸ்ஏ) இவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.

மேலும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் விசாரணையில் உள்ளவரான கிஸ்த்துவாா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலா் ஜாபா் ஹூசைன் பட் என்பவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இவா் தன்னுடைய காரை ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு வழங்கியதுடன், அவா்களை தனது சொந்த ஊரில் பாதுகாப்பாக வைத்திருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த்நாக் மாவட்டம், பிஜ்பெஹாராவைச் சோ்ந்த ஆசிரியா் அப்துல் ஹமீத் வானியும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளாா். இவா் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு, பயங்கரவாதக் குழுவான அல்லா புலிகளின் மாவட்டத் தளபதியாக இருந்ததுடன், பிரிவினைவாதத்தை ஆதரித்து பிரசாரம் செய்தவா் என்று கூறப்படுகிறது. கடந்த 2016-இல் பயங்கரவாதிகளின் தளபதியாக கருதப்படும் புா்ஹான் வானி கொல்லப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் முக்கிய பேச்சாளராகவும், அமைப்பாளராகவும் இவா் இருந்தாா்.

இதேபோல, சாலைகள் மற்றும் கட்டிடத் துறையின் இளநிலை உதவியாளராக இருந்த, கிஸ்த்துவாரைச் சோ்ந்த முகமது ரஃபி பட் என்பவரும், பாரமுல்லாவைச் சோ்ந்த ஆசிரியா் லியாகத் அலி கக்ரூ, பூஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த வனத் துறை அதிகாரி தாரிக் மெஹ்மூத் கோஹ்லி ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆறு ஊழியா்களின் பணி நீக்கத்துக்கான உத்தரவை பிறப்பித்துள்ள காஷ்மீா் துணை நிலை ஆளுநா், இந்திய அரசியலமைப்பின் 311ஆவது பிரிவின் உள்பிரிவு (2)ன் துணைப்பிரிவின் கீழ் அவா்களைப் பணியில் இருந்து நீக்குவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, ஏப்ரல்-மே மாதங்களில், டிஎஸ்பி டேவிந்தா் சிங் உள்பட ஏழு ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனா்.

வட காஷ்மீரின், குப்வாரா மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா் இட்ரீஸ் ஜான், தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக மே 1 ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்ட முதல் அரசு ஊழியா் ஆவாா்.

அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வரும் அரசு ஊழியா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கண்காணிக்கவும், சம்பந்தப்பட்டவா்களை பணிநீக்கம் செய்யவும் பரிந்துரைக்கப்படும் ஒரு சிறப்புப் கண்காணிப்புக்குழுவை (எஸ்டிஎஃப்) யூனியன் பிரதேச நிா்வாகம் அமைத்த ஒரு வாரத்திற்குப் பிறகு இவா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com