பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன்: காரணம் என்ன தெரியுமா?

காண்டாமிருகத்தை பாதுகாக்கும் வகையில் அசாம் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காண்டாமிருகத்தின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்த பிரதமர் மோடிக்கு முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும் வனவிலங்கு ஆர்வலருமான கெவின் பீட்டர்சன் புகழாரம் சூட்டியுள்ளார். ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் அசாம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். 

மோடியின் செயலுக்கு நன்றி தெரிவித்த பீட்டர்சன், உலகின் மற்ற தலைவர்களும் இவரை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அசாம் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டிய மோடி, "ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் இந்தியாவின் பெருமை. அதன் நலனுக்காக அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை மேற்கோள் காட்டி மோடிக்கு நன்றி தெரிவித்த பீட்டர்சன், "மோடிக்கு நன்றி. காண்டாமிருகங்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் உலக தலைவர்! இன்னும் பல தலைவர்கள் இதை செய்ய வேண்டும். இந்தியாவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர இதுவே காரணம்! என்ன ஒரு ஹீரோ!" என பதிவிட்டுள்ளார்.

உலக காண்டாமிருக தினமான செப்டம்பர் 22ஆம் தேதி, அசாமில் வேட்டையாடுதலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு 2,479 அரிய வகை காண்டாமிருகங்களின் கொம்புகள் எரிக்கப்பட்டது. இறுதி சடங்குகளின்போது முழங்கப்படும் மந்திரங்களை பூசகர்கள் படித்த பின்பு, காண்டாமிருகங்களின் கொம்புகளுக்கு தீவைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தலைமை விருந்திராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "உயிரோடு இருக்கும் காண்டாமிருகங்களின் கொம்புகளை மட்டுமே விலை மதிப்பற்றதாக அசாம் கருதுகிறது என்ற செய்தி இந்த முன்னேடுப்பின் மூலம் உலகுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார். 

ஒரு காலத்தில் இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பரவலாக காணப்பட்ட ஒற்றை கொம்பு காண்டாமிருகம் இப்போது பெரும்பாலும் அசாமில் மட்டுமே காணப்படுகிறது. தற்போது, அழிவின் விளம்பில் இருக்கும் மிருகமாக இது கருதப்படுகிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய இடங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்கா அசாம் மாநிலத்தில்தான் உள்ளது, இங்குதான், ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com