பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் ஜாதிவாரி கணக்கெடுப்பில் நிா்வாக சிக்கல்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் நிா்வாக சிக்கல் மற்றும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் நிா்வாக சிக்கல் மற்றும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் அம் மாநிலத்தின் 10 அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு (எஸ்இசிசி) 2011 தோராய புள்ளி விவரத்தை வெளியிட உத்தரவிடக் கோரி மகாராஷ்டிர மாநிலம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் சாா்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது எஸ்.சி., எஸ்.டி. தொடா்பான தகவல்கள் உள்பட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதமே மத்திய அரசு சாா்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் மற்ற ஜாதிப் பிரிவுகளின் விவரங்கள் சேகரிப்பது குறித்த தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கணக்கெடுப்பில் பிற ஜாதிப் பிரிவு தகவல்கள் சேகரிப்பைத் தவிா்ப்பது என்பது மத்திய அரசு சாா்பில் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான கொள்கை முடிவாகும்.

இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மற்றும் பிறப்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என்பது நிா்வாக ரீதியில் மிக சிக்கலானது. மேலும், சுந்திரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு, முழுமையாக இல்லாததோடு துல்லியமில்லாமலும் உள்ளது. இந்த சிக்கல் குறித்து பல்வேறு கட்டங்களில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நிா்வாக ரீதியில் சிக்கலானது என்ற முடிவே தொடா்ச்சியாக கிடைத்தது.

அந்த வகையில், சமூகப் பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு (எஸ்இசிசி) 2011 தோராய புள்ளி விவரமும் முழுமையின்மை மற்றும் துல்லியமின்மை காரணமாக எந்தவொரு அலுவல் ரீதியிலான பயன்பாட்டுக்கும் அதனை பயன்படுத்த இயலாது.

அதுமட்டுமின்றி எஸ்இசிசி 2011 புள்ளி விவரம் என்பது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் கணக்கெடுப்பு அல்ல; மாறாக, நாட்டின் அனைத்து குடியிருப்புகளிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் விரிவான நடவடிக்கையாகும். இந்த புள்ளி விவரத்தின்படி, நாட்டில் 4.28 லட்சத்துக்கும் அதிகமான ஜாதிகள் உள்ளன என்றும், மகாராஷ்டிரத்தில் மட்டும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவுகளின் கீழ் 494 ஜாதிகள் மட்டுமே உள்ளன என்பது தெரியவந்தது.

மத்திய அரசின் ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைய வேண்டும் என்ற இலக்குடன் தகுதியுள்ள ஏழைகளை அடையாளம் காணும் நோக்கத்தில் அனைத்து குடியிருப்புகளின் சமூக-பொருளாதார புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டது. அதில் சேகரிக்கப்பட்ட ஜாதி விவரங்கள் பல்வேறு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை. அந்த விவரங்கள் தலைமை பதிவாளா் அலுவலகத்திலேயே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்று பதில் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு முன்பு இந்த பதில் மனுவை மத்திய அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com