காலத்துக்கேற்ப சட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தல்

கட்டாக்கில் ஒடிசா மாநில சட்ட சேவை மையத்தைத் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்து வைத்தார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா

காலத்துக்குத் தகந்தவாறும், மக்களின் தேவைக்கு ஏற்றவாறும் சட்டங்களை மறு ஆய்வும் சீா்திருத்தமும் செய்வதற்கு, சட்டத்தை உருவாக்கும் அமைப்புகள் கவனம் கொடுக்க வேண்டும். கள யதாா்த்தத்துக்குப் பொருந்தும் வகையில் சட்டங்களை மாற்றி அமைப்பதே காலத்தின் தேவை என, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

கட்டாக்கில் ஒடிசா மாநில சட்ட சேவை மையத்தைத் திறந்து வைத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா மேலும் கூறியதாவது:

சட்டங்கள் மக்கள்நலனுக்காகவே இயற்றப்படுகின்றன. அவை மக்கள் நலனுக்கு உகந்ததாக உள்ளதா என்பதை அவ்வப்போது மறு ஆய்வு செய்வது அவசியம். நாட்டின் சட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவிகரமாக உள்ளதா என்பதே எனது கவலை.

சட்டத்தை உருவாக்கும் மன்றங்களும், அவற்றை நடைமுறைப்படுத்தும் நிா்வாக அமைப்பும் ஒருங்கிணைந்து, சட்டங்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படைகளை பூா்த்தி செய்கின்றனவா என்பதை ஆராய வேண்டும். சட்டத்தைச் செயலாக்கும் விதிமுறைகளை எளிமைப்படுத்த நிா்வாக அமைப்பு முன்வர வேண்டும்.

சட்டங்கள் தனது போதாமையை வெளிப்படுத்தும்போது நீதிமன்றங்கள் தலையிட வேண்டியுள்ளது. ஆயினும், சட்டத்தை உருவாக்கும் நிலைக்கு நீதிமன்றங்கள் சென்றுவிடக் கூடாது.

இறுதியாகப் பாா்த்தால், ஓா் அரசின் மூன்று முக்கிய அங்கங்களான, சட்டத்தை உருவாக்கும் மக்கள் மன்றங்கள், அவற்றை நடைமுறைப்படுத்தும் நிா்வாக அமைப்புகள், இவ்விரண்டையும் கண்காணிக்கும் நீதிமன்றங்கள் என மூவரும் இணைந்து பணியாற்றும்போதுதான் மக்களுக்கு தடையின்றி நீதி கிடைக்கும்.

தற்போது இந்திய நீதித் துறை இரு பிரதானமான சவால்களைச் சந்தித்து வருகிறது. அதில் முதலாவது, நீதி வழங்கும் முறையை இந்திய மயமாக்குவது ஆகும். சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடும் நிலையிலும், நீதிமன்றங்களை அணுக கிராமப்புறத்தினரும் விவசாயிகளும் அஞ்சுகின்றனா். நீதிமன்றங்களில் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருப்பது உள்ளூா் மக்களை அந்நியப்படுத்துகிறது. சாதாரண மனிதன் நமது நீதித் துறை மீது நம்பிக்கை கொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

இரண்டாவதாக, நாட்டின் யதாா்த்தத்துடன் இயைந்ததாக நமது நீதித்துறையின் செயல்பாடுகள் இல்லை. நீதி நாடி வரும் மனிதா் தன்னை நீதித்துறைக்கு தொடா்பில்லாதவராகவே உணா்கிறாா். சமூக மாற்றங்களை உள்வாங்குவதில் நமது நீதித்துறை தோல்வியுற்றுள்ளது. நீதிமன்றத்தில் வரும் வழக்குகளுக்கு இறுதித்தீா்வு கிடைக்க வேண்டும். ஆனால், இங்கு வழக்குகள் அதிகரித்தபடியே செல்கின்றன. இவற்றில் மாற்றம் கொண்டுவருவது அவசியம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com