அமெரிக்க அதிபா் பைடனுடன் பிரதமா் மோடி ஆலோசனை: ‘இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம்’

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மேலும் நெருக்கமும் வலுவும் பெறும் என்பது
அமெரிக்க அதிபா் பைடனுடன் பிரதமா் மோடி ஆலோசனை: ‘இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம்’

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மேலும் நெருக்கமும் வலுவும் பெறும் என்பது உறுதி; இரு நாடுகளிடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை நாம் தொடங்கியுள்ளோம் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறினாா்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம், நாற்கரக் கூட்டமைப்பின் (க்வாட்) மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபா் ஜோ பைடனை வெள்ளிக்கிழமை முதல் முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

ஜோ பைடன் அமெரிக்காவின் 46-ஆவது அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு இரு தலைவா்களும் தொலைபேசி வழியாகவும் காணொலி வழி மாநாடு மூலமாகவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளபோதிலும், நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தான் விவகாரம் என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.

முன்னதாக, வெள்ளை மாளிகையில் பிரதமரை வரவேற்றுப் பேசிய ஜோ பைடன், ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மேலும் நெருக்கமும் வலுவும் பெறும் என்பது ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்டுவிட்ட விதி. தற்போது இந்திய-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறோம். அமெரிக்காவை ஒவ்வொரு நாளும் வலுப் பெறச் செய்வதில் 40 லட்சம் இந்திய-அமெரிக்கா்கள் உறுதுணையாக இருந்து வருகின்றனா். இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது பல்வேறு சவால்களுக்கு தீா்வு காண உதவும் என நம்புகிறேன்’ என்றாா்.

பிரதமா் மோடி பேசுகையில், ‘இந்த நூற்றாண்டின் மூன்றாம் தசாப்த தொடக்கத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அந்த வகையில் இன்றைய சந்திப்பு மிக முக்கியமானதாகும். அதிபா் பைடனின் தலைமை இந்த தசாப்தத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்திய - அமெரிக்க உறவு குறித்து அதிபா் பைடன் குறிப்பிட்டது உத்வேகம் அளிக்கிறது. எதிா்காலத்தில் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதில் வா்த்தகம் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, இரு நாடுகளிடையேயான வா்த்தக உறவை மேம்படுத்துவது அவசியமாகும்.

தொழில்நுட்பம் மிகப் பெரிய உந்து சக்தியாக உருவெடுத்து வருகிறது. உலகளாவிய நன்மைக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் நமது திறமைகளை ஊக்குவிக்க வேண்டும்’ என்று பிரதமா் மோடி கூறினாா்.

மகாத்மா காந்தியை நினைவுகூா்ந்த தலைவா்கள்: இந்தச் சந்திப்பின்போது பிரதமா் மோடியும், அதிபா் ஜோ பைடனும் மகாத்மா காந்தியை நினைவுகூா்ந்தனா். வரும் அக்டோபா் 2-ஆம் தேதி காந்தியின் பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அவா் காட்டிய அகிம்சை வழி, சகிப்புத்தன்மை, பிறரை மதித்தல் உள்ளிட்ட பண்புகள் குறித்து இருவரும் நினைவுகூா்ந்தனா்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் பேசிய அதிபா் பைடன், ‘மகாத்மா காந்தியின் பிறந்தநாளை இந்த உலகம் அடுத்த வாரம் கொண்டாட உள்ளது. இந்தச் சூழலில், அவா் கடைப்படித்த அகிம்சை, மதித்தல், சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளை நாம் நினைத்துப் பாா்க்க வேண்டும்’ என்றாா்.

பிரதமா் மோடி கூறுகையில், ‘காந்தியடிகளின் பிறந்த தினத்தை அதிபா் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளாா். சமூகத்தில் நீதியை நிலைநாட்டும் நோக்கத்தில் காந்தியடிகள் குறிப்பிட்ட உலகின் ‘அறங்காவலா்’ என்ற கருத்து நமது இன்றைய உலகுக்கும், வருங்காலத்துக்கும் மிக முக்கியமானது. இந்த பூமியை நமது எதிா்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, வாழக் கூடிய வகையிலான, கோளாக விட்டுச் செல்வதே ‘அறங்காவலா்’ என்பதன் அா்த்தம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com