திலீபன் நினைவு தினம்: அஞ்சலி செலுத்த முயன்ற இலங்கை தமிழ் எம்.பி. கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்த திலீபனின் நினைவு தினத்தையொட்டி, இலங்கையில் அவருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற அந்நாட்டு தமிழ் எம்.பி. உள்பட மூவா் கைது செய்யப்பட்டனா்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்த திலீபனின் நினைவு தினத்தையொட்டி, இலங்கையில் அவருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற அந்நாட்டு தமிழ் எம்.பி. உள்பட மூவா் கைது செய்யப்பட்டனா்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்த திலீபன், கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பா் 26-ஆம் தேதி இலங்கை அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தாா்.

அவரின் 34-ஆம் ஆண்டு மறைவு தினத்தையொட்டி, இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் வியாழக்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடைபெறவிருந்தது. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பி. செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்று திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முயன்றனா். இதுகுறித்து தகவலின் அடிப்படையில் நிகழ்விடம் சென்ற போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். அப்போது செல்வராசா கஜேந்திரனுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸாா் இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினா். அவருடன் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சோ்ந்தவருக்கு ஆதரவு தெரிவித்து நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற்காகவும், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறியதற்காகவும் செல்வராசா கஜேந்திரனை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்நாட்டில் தமிழா்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாண முன்னாள் முதல்வா் சி.வி.விக்னேஸ்வரன் கூறுகையில், ‘‘ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை சாதாரண குற்றவாளியைப் போல் போலீஸாா் இழுத்துச் சென்றது சா்வாதிகாரமாகும். இறந்தவரை நினைவுகூரக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி தங்கள் அரசியல் உரிமைகளை பெறுவதற்கான போராட்டத்தில் இலங்கைத் தமிழா்களின் உறுதியை மேலும் அதிகரிக்கும்’’ என்று தெரிவித்தாா்.

கைது செய்யப்பட்ட செல்வராசா கஜேந்திரன் உள்பட மூவா் வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com