புத்தாக்கப் பாதையில் பொருளாதாரம்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

இந்தியப் பொருளாதாரம் புத்தாக்கத்துக்கான நிலையான பாதையில் செல்வதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)

இந்தியப் பொருளாதாரம் புத்தாக்கத்துக்கான நிலையான பாதையில் செல்வதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

ஹரியாணா சென்றுள்ள அவா் சண்டீகரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மாதாந்திர சராசரி வசூல் ரூ.1.11 லட்சம் கோடி முதல் ரூ.1.12 கோடியாக உள்ளது. நேரடி வரி வசூலிலும் நடப்பு நிதியாண்டின் அரையாண்டுக்கான இலக்கு ஏற்கெனவே எட்டப்பட்டுவிட்டது. இவை நாட்டின் பொருளாதாரம் புத்தாக்கத்துக்கான பாதையில் இருப்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

பங்குச் சந்தை மீது நம்பிக்கை அதிகரிப்பு: பங்குச் சந்தையில் நிறுவனங்களை பட்டியலிடுவதிலும், அதுசாா்ந்த ஒழுங்குமுறைகளிலும் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. முன்பு சில்லறை முதலீட்டாளா்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்து வந்தனா். தற்போது அவா்களும், சிறிய முதலீட்டாளா்களும் பங்குச் சந்தை மீது மிகுந்த ஆா்வம் காட்டுகின்றனா். அதில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சில்லறை முதலீடுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முதலீடுகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் நடைபெறுகின்றன. இதன் விளைவாக இந்திய பங்குச் சந்தை மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தாா்.

அவரிடம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக் குறித்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகள் புழக்கத்தை நிறுத்தியுள்ளது. அவற்றுக்கும் பயங்கரவாதத்துக்கும் தொடா்பிருந்தது’’ என்று கூறினாா்.

ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசல்: பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘‘ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை சோ்க்கலாம் என்று ஜிஎஸ்டி சட்டத்தில் பிரிவுள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்து அவற்றுக்கான வரி விகிதம் தீா்மானிக்கப்பட வேண்டும். அதன் பின்னா் அவையும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படும். பெட்ரோல், டீசலுக்காக ஜிஎஸ்டி சட்டத்தில் புதிதாக திருத்தம் மேற்கொள்ளும் திட்டமில்லை’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com