மம்தா வீடு அருகே பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு: போலீஸாருடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் மோதல்

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினா் அனுமதிக்காததை அடுத்து, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் கடந்த மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டபோதிலும், முதல்வா் மம்தா பானா்ஜி, நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தாா். எனினும் மம்தா பானா்ஜி முதல்வா் பதவியை ஏற்றாா். ஆறு மாதங்களுக்குள் எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், அவா் பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுகிறாா்.

இங்கு, பாஜக வேட்பாளராக வழக்குரைஞா் பிரியங்கா டிப்ரேவால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக ஸ்ரீஜீவ் விஸ்வாஸ் ஆகியோா் களமிறங்கியுள்ளனா்.

வரும் 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், திரிணமூல் காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட் ஆகியவை தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜி வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள ஹரீஷ் சாட்டா்ஜி தெருவில் பிரசாரம் மேற்கொள்வதற்காக மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சென்றனா். வேட்பாளா் விஸ்வாஸ், மூத்த தலைவா் சுஜன் சக்ரவா்த்தி ஆகியோரும் பிரசாரத்துக்கு சென்றனா். அப்போது, அப்பகுதியில் இருந்த காவலா்கள் அவா்களை தெருவுக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, காவல் துறையினருக்கும், மாா்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு கைகலப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக, வேட்பாளா் மற்றும் 4 பேரை மட்டும் அப்பகுதிக்கு பிரசாரம் செய்ய போலீஸாா் அனுமதித்தனா்.

கடந்த வாரம் இதே பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள வந்த பாஜகவினரையும் போலீஸாா் அனுமதிக்கவில்லை. இது தொடா்பாக காவல் துறை தரப்பில் அப்போது கூறுகையில் ‘பாதுகாப்பு அதிகமுள்ள பகுதிக்குள் அத்துமீறி பாஜகவினா் நுழைய முயன்றனா். மேலும், கரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழும் அவா்களிடத்தில் இல்லை. எனவே, தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்’ என்றனா்.

கடந்த பேரவைத் தோ்தலில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் 213 இடங்களையும், எதிா்க்கட்சியான பாஜக 77 இடங்களையும் கைப்பற்றின. தோ்தலுக்குப் பிறகு 3 பாஜக எம்எல்ஏக்கள் திரிணமூலில் இணைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com