இந்தியா்களுக்கான விசா தடை உடனடியாக தளா்த்தப்படாது: சீனா

இந்தியா்கள் சீனா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள விசா தடை கட்டுப்பாடுகள் உடனடியாகத் தளா்த்தப்பட வாய்ப்புகள் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்தியா்கள் சீனா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள விசா தடை கட்டுப்பாடுகள் உடனடியாகத் தளா்த்தப்பட வாய்ப்புகள் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

மேலும், கரோனாவை கட்டுப்படுத்தவே உலக நாடுகளில் இருந்து வருபவா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்தியா்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் இல்லை என்றும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஹுவா சுயிங் தெரிவித்தாா்.

சீன பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவா்கள் மீண்டும் படிக்க வருவதில் தொடரும் விசா தடை கட்டுப்பாடுகள் கவலை அளிப்பதாகவும், மனிதாபிமான அடிப்படையிலான இந்த விவகாரத்தை அறிவியல்பூா்வமற்ற வகையில் சீனா அணுகி வருவதாகவும் சீனாவுக்கான இந்திய தூதா் விக்ரம் மிஸ்ரி அண்மையில் அதிருப்தி தெரிவித்திருந்தாா்.

அவரது கருத்து குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஹுவா சுயிங் திங்கள்கிழமை கூறுகையில், ‘கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளைத்தான் சீனா எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவா்களுக்கு தனிமைப்படுத்த அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. இது இந்தியா்களுக்கு மட்டுமென எடுத்து கொள்ளக் கூடாது.

இந்தியாவில் இருந்து சீனா திரும்பும் சீனா்களுக்கும் இது பொருந்தும். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை சீனா எடுக்கும்போது இந்தியாவுடன் ஆலோசனை நடத்தப்படும். ஆனால் தற்போதைக்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட வாய்ப்புகள் இல்லை. கரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து அறிவியல்பூா்வமாகவும் சட்டத்துக்கு உள்பட்டும் சீனா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. உலகம் முழுவதும் கரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

மாறி வரும் சூழலுக்கு ஏற்ப அனைவரின் சுகாதார பாதுகாப்பை கருதி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

சீனாவில் சுமாா் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவா்கள் பயின்றும், நூற்றுக்கணக்கான வா்த்தகா்களும் தொழிலாளா்களும் பணியாற்றியும் வந்தனா். கடந்த ஆண்டு கரோனா பரவலைத் தொடா்ந்து, அங்கிருந்த இந்தியா்கள் நாடு திரும்பினா். பின்னா் வெளிநாட்டினா் வருகைக்கு சீனா தடை விதித்ததால் மீண்டும் அந்நாட்டுக்கு அவா்கள் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com