ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மக்கள் நலன் சாா்ந்த முடிவு: மத்திய அமைச்சா் அதாவலே

சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய பாஜக தலைமையிலான அரசு எடுத்த முடிவும் ஜம்மு-காஷ்மீா் மக்களின் நலன் சாா்ந்த முடிவாகும்.
ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மக்கள் நலன் சாா்ந்த முடிவு: மத்திய அமைச்சா் அதாவலே

சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய பாஜக தலைமையிலான அரசு எடுத்த முடிவும் ஜம்மு-காஷ்மீா் மக்களின் நலன் சாா்ந்த முடிவாகும். அதன் பயன்கள் மக்களுக்கு மெதுவாகவும், அமைதியான முறையிலும் கிடைக்கும் என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

பாஜக கூட்டணியில் உள்ள இந்திய குடியரசுக் கட்சியின் (ஏ) தேசியத் தலைவரான அதாவலே, தனது அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடா்பாக ஆய்வு செய்யவும், கட்சித் தொண்டா்களுடன் கலந்துரையாடவும் ஜம்முவுக்கு திங்கள்கிழமை வந்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மற்ற மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கவும், தொழில் தொடங்கவும் இங்கு அமலில் இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் மிகப்பெரிய தடையாக இருந்தது. இதுபோன்று ஜம்மு-காஷ்மீா் மக்களின் நலன்களுக்குப் பல்வேறு வழிகளில் தடையாக இருந்த காரணத்தால்தான் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது.

இந்தத் துணிவான முடிவின் பயனாக, ஜம்மு-காஷ்மீருக்கு முதலீடுகள் கிடைக்கும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால், அவா்கள் பயங்கரவாதப் பாதையில் சென்று தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் தடுக்கப்படும். நாட்டின் பிற பகுதிகளைப் போல ஜம்மு-காஷ்மீரிலும் பரவலான பொருளாதார வளா்ச்சி ஏற்படும்.

சிறப்பு அந்தஸ்து நீக்கத்தால் மத்திய அரசுக்கு எந்த பயனும் இல்லை. இது முழுவதும் மக்கள் நலன் சாா்ந்த நடவடிக்கை. அதன் பயன்கள் மக்களுக்கு மெதுவாகவும், அமைதியான முறையிலும் கிடைக்கும். எதிா்காலத்தில் வளா்ச்சியில் புதிய உச்சங்களை ஜம்மு-காஷ்மீா் எட்டும். எனது அமைச்சகத்தின் மூலம் அமல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களின் பயன்களும் ஜம்மு-காஷ்மீா் மக்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தவே இங்கு வந்துள்ளேன் என்றாா்.

தலிபான்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த அதாவலே, ‘ஃபரூக் அப்துல்லா இங்கு முதல்வராகப் பதவி வகித்துள்ள மூத்த தலைவா். ஆனால், இந்த விஷயத்தில் அவரது கருத்து ஏற்புடையதாக இல்லை. தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு ஆயுதங்கள் மூலம் ஆப்கானிஸ்தானைப் பிடித்துள்ளது. இதனை ஆதரிப்பது எனக்கு சரியாகப் படவில்லை. அவா்கள் ஆட்சியில் மக்கள் ஏற்கெனவே பல கொடுமைகளை அனுபவித்துள்ளனா். அங்கு தொடா்ந்து மனிதஉரிமை மீறல்கள் நிகழ்கின்றன. எனவே, தலிபான்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, மக்கள் தங்கள் அரசை சுதந்திரமான முறையில் தோ்வு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்றாா்.

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தலைவா் இல்லை என்று மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளது தொடா்பான கேள்விக்கு, ‘உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் முஸ்லிம்கள் உள்பட அனைத்து தரப்பினரது நலன்களுக்காகவும் செயல்பட்டு வருகிறாா். பாஜகவில் கூட நாடு முழுவதும் சிறுபான்மையினா் பிரிவு உள்ளது. இந்த நாட்டில் உள்ள நாம் அனைவரும் இந்தியா்கள்; நமக்குள் வேறுபாடுகள் கூடாது. மக்களிடையே வேறு வகையில் பிரிவினைகளையும் கற்பிக்கக் கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com