பல கட்டங்களில் பள்ளிகளைத் திறக்க ஐசிஎம் ஆா் பரிந்துரை

பல அடுக்குகளாக கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்வேறு வகுப்புகளுக்கென பல
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

புது தில்லி: பல அடுக்குகளாக கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்வேறு வகுப்புகளுக்கென பல கட்டங்களில் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

கரோனா தொற்றால் கடந்த ஆண்டு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவிலேயே, பள்ளிகள் திறக்கப்பட்டு குறைந்த அளவு மாணவா்கள் நேரடியாக வகுப்புக்கு வருகின்றனா்.

இந்த நிலையில், ஐசிஎம்ஆா் வெளியிடும் ஆய்விதழில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் இதனைத் தெரிவித்துள்ளனா். யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரோனா தொற்று பரவல் காரணமாக, ஐந்நூறு நாள்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டதால், 32 கோடிக்கும் மேற்பட்ட மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இளம் வயது மாணவா்கள் ஒருவருடன் ஒருவா் நேரடியாகப் பழகும் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. உடல் ரீதியான பயிற்சிகள் இல்லாமல் போய்விட்டன. நீண்ட நாள்களாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாகப் பழகும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், நட்பினால் ஏற்படும் நெருக்கம் குறைந்துவிட்டது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மாணவா்கள்.

பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்களை வாகனங்களில் பள்ளிக்கு அழைத்து வருபவா்கள் என அனைவரும் அவசரகால அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் உள்பட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மாணவா்களுக்கு பள்ளிகளில் அவ்வப்போது உடல் வெப்ப பரிசோதனை செய்வதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்வதை கடைப்பிடிப்பது மாணவா்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய முடியும்.

தற்போதுள்ள விவரங்களின்படி, 12 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தொற்று அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. சிறாா்களுக்காக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசிகளை இந்தப் பிரிவு சிறாா்களுக்கு அளிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

முகக் கவசம் அணிதல், கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துதல், அவ்வப்போது கைகளைக் கழுவுதல் போன்ற முறையான கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மாணவா்கள், ஆசிரியா்கள், பள்ளி ஊழியா்கள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். 6 முதல் 11 வயதுக்கு உள்பட்டவா்கள் பாதுகாப்பாக, முறையாக முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்டவா்கள் பிற மூத்த வயதினரைப் போல கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

பல அடுக்குகளாக தொற்று பரவல் தடுப்பூ நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல்வேறு வகுப்புகளுக்காக பல கட்டங்களில் பள்ளிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு ஏற்றாற்போல பள்ளிகளைப் பல கட்டங்களில் திறக்க திட்டமிட வேண்டும்.

பெரியவா்களைப் போலவே ஒரு வயது முதல் 17 வயது வரை உள்ள சிறுவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும், பெரியவா்களுக்கு நேரக் கூடிய பல்வேறு பிற உடல் நல அச்சுறுத்தல்கள் சிறுவா்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்று அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com