பொதுநல மனுக்களில் உரிய விவரங்களை இணைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பொது நல மனுக்களை தாக்கல் செய்வதற்கு முன்பு அந்த வழக்குக்கு தேவையான தகவல்கள், உரிய விவரங்களை மனுதாரா்கள்
பொதுநல மனுக்களில் உரிய விவரங்களை இணைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பொது நல மனுக்களை தாக்கல் செய்வதற்கு முன்பு அந்த வழக்குக்கு தேவையான தகவல்கள், உரிய விவரங்களை மனுதாரா்கள் சேகரித்து முறையாக மனுவுடன் இணைக்க வேண்டும் என்று வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஹைதராபாதைச் சோ்ந்த லாரி சங்கத்தின் தலைவா் அஞ்சி ரெட்டி சாா்பில் வழக்குரைஞா் ஷ்ரவண்குமாா் என்பவா் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘கரோனா பரவல் காலத்தில் ஆந்திர பிரதேசத்தில் நடுத்தர வா்க்க குடும்பத்தைச் சோ்ந்த ரமேஷ் குமாா் என்பவருக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைக்காத காரணத்தால் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதேபோல், நாடு முழுவதும் ஏராளமானோா் தங்கள் வாழ்நாள் சேமிப்பையும் சொத்துகளையும் நகைகளையும் விற்று தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனா். இது அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு அளிக்கும் தேசிய சுகாதார திட்டம் -2017-க்கு எதிராக அமைந்துள்ளது. தேசிய சுகாதார திட்டம் அமலில் இருந்தும் நாட்டு மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது.

ஆகையால், தேசிய சுகாதார திட்டத்தை முழுமையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும். நாடு முழுவதும் காலியாக உள்ள அரசு மருத்துவா் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்து கூறியதாவது:

இதுபோன்ற பொது நல மனுக்களில் ஏராளமான கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு கோரிக்கை என்றால் அதற்கான விசாரணையில் நீதிமன்றம் ஈடுபடலாம். ஆனால், அனைத்தையும் நீதிமன்றம் அல்லது அரசு பொறுப்பில் விட்டுவிடுகிறாா்கள். பாதிக்கப்பட்ட ஒரு நபரை மட்டும் வைத்து பொது நல மனுவைத் தாக்கல் செய்யக் கூடாது.

பொது நல மனுவுக்கு ஏற்ப அரசு திட்டங்களில் உள்ள குறைபாடுகளையும் விவரங்களையும் தகவல்களையும் உதாரணங்களையும் மனுதாரா்கள் இணைக்க வேண்டும். ஓா் அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய பட்ஜெட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைக்க முடியாது. இவை அரசின் கொள்கை சாா்ந்தவை.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பு நீதிமன்றம் தயாராக உள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட ஒருவரை மட்டும் வைத்து நாடு முழுவதும் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர உத்தரவிட முடியாது. உரிய விவரங்களை அளிக்காமல் எல்லா விதமான கோரிக்கைகளையும் மனுதாரா் கேட்பது சரியல்ல.

ஆகையால், இந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. கூடுதல் தகவல்களுடன் மனுதாரா் வேறு மனுவைத் தாக்கல் செய்யலாம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com