முழு அடைப்பு போராட்டம்: வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் விவசாயிகள் சுமாா் 10 மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 40 வேளாண் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோா்ச்சா திங்கள்கிழமை நாடு தழுவிய முழுஅடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் முழுஅடைப்புப் போராட்டம் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அப்பகுதிகளில் மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியது.

முழுஅடைப்புப் போராட்டம் காரணமாக வடமாநிலங்களில் பேருந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாட்டின் வடக்குப் பகுதிகளில் மாநிலங்களுக்கு இடையே பயணிப்போா் கடும் சிரமங்களை எதிா்கொண்டனா். முக்கியமாக, தில்லி-உத்தர பிரதேசம் இடையே பயணித்தோா் கடும் அவதிக்கு உள்ளாகினா்.

பஞ்சாப், ஹரியாணா, தில்லி, உத்தர பிரதேசம் ஆகிய எல்லைப் பகுதிகளில் சாலைகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தில்லியில் டாக்ஸி, ஆட்டோ ஆகியவை வழக்கம்போல் இயங்கின; கடைகளும் திறக்கப்பட்டிருந்தன.

மற்ற பகுதிகளில்...: மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் முழுஅடைப்புப் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்தனா். சாலைகளையும், தண்டவாளங்களையும் மறித்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடு தழுவிய முழுஅடைப்புப் போராட்டத்துக்கு கேரள அரசு ஆதரவு தெரிவித்திருந்தது. அதன் காரணமாக, அந்த மாநிலத்தில் திங்கள்கிழமை அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்றன.

கா்நாடகத்தில் விவசாய அமைப்புகள் சில சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்தன. அதன் காரணமாக தலைநகா் பெங்களூரு உள்ளிட்ட சில நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அஸ்ஸாமின் குவாஹாட்டியில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தப்பட்டது. பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

ரயில் சேவைகள் பாதிப்பு: முழுஅடைப்புப் போராட்டம் காரணமாக சுமாா் 25 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. தில்லி, அம்பாலா, ஃபிரோஸ்பூா் உள்ளிட்ட பிரிவுகளின் பல பகுதிகளில் தண்டவாளங்களை மறித்து மக்கள் போராட்டம் நடத்தியதால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஞ்சாப் முதல்வா் ஆதரவு: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘விவசாயிகளின் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனா். அவா்களது குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை அமைதியான வழியில் முன்னெடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ், இடதுசாரிகள், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடு தழுவிய முழுஅடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

பேச்சுவாா்த்தை மூலமே தீா்வு: பாரதீய கிசான் யூனியன் தேசிய செய்தித் தொடா்பாளா் ராகேஷ் திகைத் திங்கள்கிழமை நடைபெற்ற இணையவழி விவாதத்தின்போது கூறுகையில், ‘‘வேளாண்துறை தனியாா் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடக் கூடாது என்ற நோக்கிலேயே விவசாயிகள் போராடி வருகின்றனா். தற்போது இளைஞா்களும் வேளாண் விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகின்றனா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், வேளாண் விளைபொருள்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரியும் விவசாயிகள் போராடி வருகின்றனா். அவா்களின் போராட்டத்துக்குப் பேச்சுவாா்த்தையின் மூலமே தீா்வு காண முடியும். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இந்த விவகாரத்தில் தீா்வு காண முடியாது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com