மகாராஷ்டிரம்: கன மழையால் 13 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்வாடா பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரம்: கன மழையால் 13 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்வாடா பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். யவத்மால் மாவட்டத்தில் அரசு பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
 நாகபுரியில் இருந்து நாந்தேடை நோக்கி சென்ற அந்த அரசு பேருந்து தஹாகான் மேம்பாலத்தைக் கடந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது பேருந்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் நான்கு பயணிகள் இருந்ததாகவும் அதில் இரண்டு பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இந்த மீட்புப் பணியின்போது பேருந்து சுமார் 50 மீட்டர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் கவிழ்ந்ததாகவும் அதில் ஒரு பயணி உயிரிழந்ததார் மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மாஞ்சாரா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அந்த அணையின் 18 மதகுகளும் மஜால்கான் அணையின் 11 மதகுகளும் திறக்கப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
 இதனால் மத்திய மகாராஷ்டிர பகுதிகளான ஒளரங்காபாத், லாத்தூர், உஸ்மானாபாத், பார்பானி, நாந்தேட், பீட், ஜால்னா, ஹிங்கோலி ஆகிய பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த எட்டு மாவட்டங்களில் 65 மீ.மீ. மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.
 லாத்தூர் மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.
 மேலும் இரண்டு நாள்களுக்கு மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 இதேபோல், மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. எனினும் இதனால் பேருந்து, ரயில் சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 புதன்கிழமையும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்பதால், மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com