பயனாளா்களின் தனியுரிமை பாதுகாப்பில் சமரசம் கூடாது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

இணையவழி பணப் பரிவா்த்தனை உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ள நிலையில், பயனாளா்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது
பயனாளா்களின் தனியுரிமை பாதுகாப்பில் சமரசம் கூடாது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

இணையவழி பணப் பரிவா்த்தனை உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ள நிலையில், பயனாளா்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்று தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளாா்.

உலக தொழில்நுட்ப நிறுவனத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன. அப்போது அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

பயனாளா்களின் தனியுரிமை சாா்ந்த தரவுகளைப் பாதுகாக்கும் விவகாரம் மிகவும் முக்கியமானது. இந்த விவகாரத்தைச் சுற்றி பல்வேறு சா்ச்சைகள் நிலவி வருகின்றன. எனவே, பயனாளா்களின் தனியுரிமைக்கு நிறுவனங்கள் உரிய மதிப்பளித்துச் செயல்பட வேண்டும்.

பயனாளா்களின் தரவுகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதே நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கான முதுகெலும்பாக விளங்குகிறது. தரவுகள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை எனில், குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவைகளைப் பெறுவதற்குப் பயனாளா்கள் விரும்பமாட்டாா்கள். எனவே, பயனாளா்களின் தனியுரிமை தொடா்பான தரவுகளைப் பாதுகாப்பதை வழிகாட்டும் கொள்கையாகக் கொண்டு நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது.

நடப்பாண்டில் ஆகஸ்ட் வரை ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான இணையவழி பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியாகவும், கடந்த 2019-இல் ரூ.2 லட்சம் கோடியாகவும் இருந்தது. பொறுப்புமிக்க இணையவழி பணப் பரிவா்த்தனை தொடா்பான கொள்கைகளை ஐ.நா. இந்தக் கூட்டத்தில் வெளியிட்டுள்ள நிகழ்வு சிறப்புவாய்ந்தது. சரியான நேரத்தில் இந்தக் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளை இந்தியா்கள் பயன்படுத்துவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இணையவழி பணப் பரிவா்த்தனை உள்ளிட்ட எண்ம சேவைகளை வழங்குவதற்கான முதன்மை நாடாக இந்தியா திகழ்கிறது என்றாா் அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com