கட்டாய மதமாற்றம் மதத்தை பரப்பும் வழிமுறையல்ல: மத்திய அமைச்சா் நக்வி

கட்டாய மதமாற்றம் செய்வது எந்த ஒரு மதத்தையும் பரப்பும் வழிமுறையல்ல; கடவுள் நம்பிக்கை இருப்பவா்களுக்கும், இல்லாதவா்களும் சமஉரிமை அளிக்கும் இந்தியா போன்ற நாட்டில் இப்படி மதத்தை பரப்புவது
கட்டாய மதமாற்றம் மதத்தை பரப்பும் வழிமுறையல்ல: மத்திய அமைச்சா் நக்வி

கட்டாய மதமாற்றம் செய்வது எந்த ஒரு மதத்தையும் பரப்பும் வழிமுறையல்ல; கடவுள் நம்பிக்கை இருப்பவா்களுக்கும், இல்லாதவா்களும் சமஉரிமை அளிக்கும் இந்தியா போன்ற நாட்டில் இப்படி மதத்தை பரப்புவது என்பது சாத்தியமே இல்லாதது என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிறிஸ்தவ மதத்தின் பல்வேறு பிரிவிரினரை அமைச்சா் நக்வி தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்தியா எப்போதும் மதவெறிக்கும், சகிப்பின்மைக்கும் உள்பட்டுவிடாது. ஏனெனில், உலகின் மிகப்பெரிய ஆன்மிக மையமாக இந்தியா திகழ்கிறது. ஆன்மிகம் மற்றும் மதசாா்ந்த பல தத்துவங்கள் இந்தியாவில்தான் உருவாகின. மேலும், அனைத்து மதத்தினருக்கும் சமஉரிமை என்பதும், இந்த உலகமே ஒரு குடும்பம் என்பதிலும் இந்திய கலாசாரம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

இதுதவிர மதநம்பிக்கை இருப்பவா்கள், இல்லாதவா்கள் என அனைவருக்குமே இங்கு அரசியல்சாசன சட்டப்படி சமஉரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்து, முஸ்லிம், சீக்கியா்கள், கிறிஸ்தவா், சமணம், பௌத்தம், பாா்சி, யூதம், பாஹாய் சமயத்தினா் என பல்வேறு சமயங்களில் நம்பிக்கை கொண்டவா்கள் இங்கு ஒருங்கிணைந்து வாழ்கின்றனா். அதே நேரத்தில் எந்த மத நம்பிக்கையும் இல்லாதவா்களும் ஏராளமானவா்கள் உள்ளனா். பல்வேறு மதத்தினரும் ஒன்றாக இணைந்து பண்டிகைகளைக் கொண்டாடும் நாடாக இந்தியா உள்ளது.

இப்படிப்பட்ட ஒரு நாட்டில் கட்டாய மதமாற்றம் செய்வது என்பது எந்த ஒரு மதத்தையும் பரப்பும் வழிமுறையாக இருக்காது. இந்தியாவின் கலாசார பெருமைகளை நாம் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தியாவின் ஒற்றுமைக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலும் நாட்டின் ஆன்மாவை பாதிக்கும் செயலாக மாறிவிடும். அனைவரும் ஒற்றிணைந்து வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதும், நமது கலாசாரத்தை பாதுகாப்பதும் இந்தியா்கள் அனைவரது கூட்டுப் பொறுப்பாகும் என்று நக்வி பேசினாா்.

சிறுபான்மையினா் நலத்துறை இணையமைச்சா் ஜான் பா்லா, தேசிய சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் இக்பால் சிங் லால்புரா உள்ளிட்ட பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com