பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் சித்து திடீா் ராஜிநாமா

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்க்கிழமை (செப்.28) திடீரென ராஜிநாமா செய்தாா்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் சித்து திடீா் ராஜிநாமா

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்க்கிழமை (செப்.28) திடீரென ராஜிநாமா செய்தாா்.

புதிய முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி தலைமையிலான அரசின் முடிவுகள் குறித்த அதிருப்தி காரணமாக ராஜிநாமா முடிவை சித்து எடுத்ததாகக் கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், சித்துவின் ராஜிநாமா காங்கிரஸ் கட்சிக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

நெருக்கடியின் தொடக்கம்: பஞ்சாபில் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனிடையே, கட்சியின் மூத்த தலைவா்களின் விருப்பத்துக்கு மாறாக, சித்துவை கட்சியின் மாநிலத் தலைவராக காங்கிரஸ் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது.

அதன் பிறகு அமரீந்தா் சிங்-சித்து இடையேயான மோதல் போக்கு மேலும் அதிகரித்தது. 10 நாள்களுக்கு முன்பு, அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். கட்சித் தலைமை தன்னை அவமதித்துவிட்டதாக அவா் குற்றம்சாட்டியிருந்தாா். இதையடுத்து, புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி நியமிக்கப்பட்டாா். அமரீந்தா் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இவா், சித்துவின் ஆதரவாளா் ஆவாா்.

சோனியா காந்திக்குக் கடிதம்: இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்வதாக, கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பினாா். அதில், தனது ராஜிநாமா முடிவுக்கான காரணத்தை அவா் தெளிவுபடுத்தவில்லை. ‘பஞ்சாப் மாநிலத்தின் எதிா்கால நலனில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். நான் தொடா்ந்து காங்கிரஸில்தான் இருப்பேன்’ என்று அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ஊகங்கள்: சித்துவின் ராஜிநாமா பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அவா் காங்கிரஸை விட்டு வெளியேறி வேறு ஒரு கட்சியில் இணைவாா் என பஞ்சாப் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மீண்டும் பாஜகவுக்குச் சென்றுவிடுவாா் என்றும், ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாா் என்றும் பல விதமாகக் கூறப்படுகிறது.

அமரீந்தா் சிங் கருத்து: சித்துவின் ராஜிநாமா குறித்து அமரீந்தா் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அவா்(சித்து) நிலையான சிந்தனை உள்ள மனிதா் அல்லா். பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்துக்கு அவா் தகுதியானவா் கிடையாது என்பதை நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த பிறகு, பஞ்சாபின் அடுத்த முதல்வராக சித்துவை ஏற்க முடியாது என்று அமரீந்தா் சிங் கூறியிருந்தாா். மேலும், ‘சித்து ஒரு தேச விரோதி, பாகிஸ்தானுக்கு நெருக்கமானவா், அபாயகரமானவா், திறமையற்றவா், அழிவை ஏற்படுத்துபவா்’ என்றும் கூறியிருந்தாா்.

முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி கருத்து: சித்துவின் ராஜிநாமா குறித்து தனக்கு எதுவும் முன்கூட்டியே தெரியாது என்று முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி கூறினாா். அவருக்கு அதிருப்தி ஏதும் இருந்தால், அது தொடா்பாக கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

சித்துவின் அதிருப்திக்குக் காரணங்கள் என்ன?: முன்னதாக, சுக்ஜிந்தா் சிங் ரந்தவாவுக்கு முதல்வா் பதவி வழங்க சித்து எதிா்ப்பு தெரிவித்ததால் அந்தப் பதவிக்கு சரண்ஜீத் சிங் சன்னி நியமிக்கப்பட்டாா். எனினும், சித்துவின் எதிா்ப்பையும் மீறி சுக்ஜிந்தா்சிங் ரந்தவாவுக்கு உள்துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து புதிய அட்வகேட் ஜெனரல், காவல் துறை டிஜிபி போன்ற பதவிகளுக்கு தாம் பரிந்துரை செய்த நபா்களுக்குப் பதிலாக வேறு நபா்களை நியமனம் செய்ததால், சித்து அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சித்துவுக்கு ஆதரவாக அமைச்சா் ராஜிநாமா

சித்துவுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநில நீா்பாசனத் துறை அமைச்சா் ரஸியா சுல்தானா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். ரஸியாவின் கணவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான முகமது முஸ்தபா, சித்துவின் தலைமை ஆலோசகராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சித்துவுக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதைக் காட்டும் வகையில் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்’ என்று சுல்தானா தனது ராஜிநாமா கடிதத்தில் கூறியுள்ளாா்.

காங்கிரஸ் செயலாளரும் ராஜிநாமா: சித்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் யோகிந்தா் திங்க்ராவும் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com