கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் கட்சிக்கு தொடர் நெருக்கடி; கபில் சிபல், குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து மூத்த தலைவர் அதிருப்தி

கபில் சிபலின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த சர்மா தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து, காந்தி குடும்பத்தின் மீது அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் விமரிசனம் மேற்கொண்டிருந்தார். இதையடுத்து, கபில் சிபல் விட்டின் முன்பு குவிந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதல் குறித்து அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ஆனந்த சர்மா, கபில் சிபலின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "கபில் சிபலின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த மோசமான செயல் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டிய வரலாறு உள்ளது. கருத்தும் கருத்து வேறுபாடும் ஜனநாயகத்தின் ஓர் அங்கம். சகிப்புத்தன்மையும் வன்முறையும் காங்கிரஸ் கலாச்சாரத்திற்கும் அந்நியமானது. இதற்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை ஒழுங்குபடுத்தப்படுத்த வேண்டும்" என்றார். 

நேற்று இரவு, கபில் சிபல் வீட்டின் முன்பு குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள், 'கபில் சிபல் விரைவில் குணமடைய வேண்டும்' என எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, வீட்டின் மீது தக்காளிகளை வீசி கார் சேதப்படுத்தினர். 'கட்சியை விட்டு வெளியேறு, தெளிவு பெறு', 'ராகுல் காந்தி வாழ்க' போன்ற கோஷங்களை எழுப்பினர்.

பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு நான்கு மாதங்களே உள்ள நிலையில், மாநில தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் அரசியல் குழப்பம் நீடித்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com