‘திரிணமூலுக்கு வாக்களிக்க ரூ. 500 விநியோகம்’: பாஜக வேட்பாளர் குற்றச்சாட்டு

திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களிக்க ரூ. 500 பணம் விநியோகிக்கப்படுவதாக பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால் வியாழக்கிழமை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால்
பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால்

திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களிக்க ரூ. 500 பணம் விநியோகிக்கப்படுவதாக பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால் வியாழக்கிழமை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க இடைத்தேர்தலில் பவானிபூர் தொகுதியில் திரிணமூல் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார்.

இந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பவானிபூர் தொகுதியின் 72வது வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த பிரியங்கா பணம் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், “திரிணமூலுக்கு வாக்களிப்பதற்காக பணம் விநியோகிக்கப்படுகிறது. பான்ஸ்ட்ரோனி பகுதியிலிருந்து வந்த ஒருவர் திரிணமூல் கட்சியினர் ரூ. 500 கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரிணமூல் சட்டப்பேரவை உறுப்பினர் மதன் மித்ரா வேண்டுமென்றே வாக்குப்பதிவு இயந்திரத்தை முடக்கியுள்ளார்.”

மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி, தான் வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூரில் போட்டியிடாமல், தனக்கு சவால் விட்ட பாஜக வேட்பாளரும், முன்பு திரிணமூல் காங்கிரஸில் இருந்தவருமான சுவேந்து அதிகாரியை எதிா்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா்.

இருப்பினும் திரிணமூல் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் முதல்வராக மம்தா பொறுப்பேற்றாா். முதல்வா் பதவியைத் தக்கவைக்க அவா் 6 மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதையடுத்து, மம்தா போட்டியிடுவதற்காக, மாநில அமைச்சரும் பவானிபூா் எம்எல்ஏவுமான சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து பவானிபூா் மற்றும் காலியாகவுள்ள ஜாங்கிபூா், சம்சோ்கஞ்ச் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜியை எதிா்த்து பாஜக சாா்பில் மூத்த வழக்குரைஞா் பிரியங்கா டிப்ரிவால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஸ்ரீஜிவ் பிஸ்வாஸ் ஆகியோா் களத்தில் உள்ளனர்.

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com