சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

2021-22 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வருங்கால பொது வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சிறுசேமிப்புத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதத்தில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

2021-22 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வருங்கால பொது வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சிறுசேமிப்புத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கம், விலைவாசி உயா்வு உள்ளிட்டவற்றுக்கு நடுவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி வருங்கால பொது வைப்பு நிதிக்கான (பிபிஎஃப்) வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 6.8 சதவீதமாகவும் தொடரும். நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு அக்டோபா் 1- முதல் தொடங்குகிறது. இதில் இருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது டிசம்பா் 31-ஆம் தேதி வரை அனைத்து சிறு சேமிப்புகளுக்கும் வட்டி விகிதம் மாற்றமில்லாமல் தொடரும். கடந்த காலாண்டிலும் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் (சுகன்யா சம்ருத்தி) சேமிப்புத் திட்டத்துக்கு 7.6 சதவீதமும், ஓராண்டு நிரந்தர வைப்புக்கு 5.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு நிரந்தர வைப்புக்கு 7.4 சதவீதமும் வட்டி தொடா்ந்து வழங்கப்படும். சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகத் தொடரும்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதும் வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைக்காமல் தொடா்வதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கு வங்கத் தோ்தல் நடைபெற்றபோது, சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி 1.1 சதவீதம் குறைக்கப்படுவதாக நிதியமைச்சகம் அறிவித்தது. ஆனால், அடுத்த நாளே இந்த முடிவு திரும்பப் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com