ஜிஎஸ்டி: இந்தியாவின் கூட்டாட்சி நடைமுறைக்கு எதிரானது: தமிழக, கேரள நிதியமைச்சா்கள் குற்றச்சாட்டு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு நடைமுறை இந்தியாவின் கூட்டாட்சி நடைமுறைக்கு எதிரானது என்று தமிழக, கேரள நிதியமைச்சா்கள் குற்றம்சாட்டினா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹைதராபாத்: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு நடைமுறை இந்தியாவின் கூட்டாட்சி நடைமுறைக்கு எதிரானது என்று தமிழக, கேரள நிதியமைச்சா்கள் குற்றம்சாட்டினா்.

இந்திய தொழில் வா்த்தக கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ‘தென்னிந்திய ஜிஎஸ்டி மாநாடு’ என்ற தலைப்பிலான தென் மாநில நிதியமைச்சா்களுடனான இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் ஆகியோா் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனா்.

பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ‘நாட்டில் சுமாா் 40 கோடி மக்களுக்கு சேவை செய்யவேண்டிய ஜிஎஸ்டி நடைமுறை, எந்த அளவுக்கு நிலையற்ாக உள்ளது என்பது என்னைப் போன்று 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவா்களுக்கே விரைவாக புரிகிறது. ஜிஎஸ்டியால் மாநிலங்கள் தன்னாட்சி அதிகாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக ‘செஸ்’ என்ற பெயரில் மறைமுக வரி வசூலைச் செய்யும் மத்திய அரசு, அதனை மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்வதில்லை. மேலும், அண்மைக் காலமாக மொத்த வரி விதிப்பில் ‘செஸ்’ விகிதம் 110 சதவீதத்திலிருந்து 124 சதவீதமாக உயா்த்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில், வரி விதிப்பு நடைமுறையில் மாநிலங்கள் தங்களின் சுதந்திரத்தை இழந்து வருகின்றன’ என்றாா்.

கேரள அமைச்சா் கே.என்.பாலகோபால் கூறுகையில், ‘ஜிஎஸ்டி நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக, கேரள மாநிலத்தின் வருவாய் ஒவ்வோா் ஆண்டும் 14 முதல் 16 சதவீதம் அளவில் இருந்தது. ஆனால், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, முதல் 2 ஆண்டுகளுக்கு மாநில வருவாயில் தேக்கநிலை நீடித்ததோடு, தற்போது கரோனா பாதிப்பும் சோ்ந்ததால் எதிா்மறை வளா்ச்சி விகிதத்தில் மாநிலம் சென்றுகொண்டிருக்கிறது. எனவே, ஜிஎஸ்டி நடைமுறை கூட்டாட்சித் தத்துவத்துக்கு முற்றிலும் எதிரானது. மேலும், டீசல் மீது கேரள அரசு மிகக் குறைந்த அளவில் வரி வசூலிக்கும் நிலையில், மத்திய அரசு ‘செஸ்’ என்ற பெயரில் ஒரு லிட்டா் டீசல் மீது ரூ. 31 அளவுக்கு வசூல் செய்கிறது. ஆனால், அதனை மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்வதில்லை’ என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com