வங்கதேசம், இலங்கைக்கு அதிக கோதுமை ஏற்றுமதி: மாநிலங்களவையில் தகவல்

கடந்த நிதியாண்டில் மாா்ச் 21 வரை இந்தியா 70.30 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மாா்ச் 21 வரை இந்தியா 70.30 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது. இதில், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அதிகஅளவில் கொள்முதல் செய்துள்ளன என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு வா்த்தகத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

2021-22 நிதியாண்டில் மாா்ச் 21 வரை 70.30 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை நமது நாடு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக வங்கதேசத்துக்கு 39.37 லட்சம் டன், இலங்கைக்கு 5.80 லட்சம் டன், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 4.69 லட்சம் டன் ஏற்றுமதியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து கடல் உணவுகள் ஏற்றுமதியாவதும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 7.16 மில்லியன் டாலா் மதிப்பிலான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளோம். இந்தியாவில் பயன்படுத்தப்படும் மீன் பிடிவலைகள், கடல் ஆமைகளைப் பாதிப்பதாகக் கூறி இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஒரு வகை இறாலுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

தெற்காசிய நாடுகளுடனான இந்தியாவின் வா்த்தகம் கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை இந்தியா தொடா்ந்து பின்பற்றி வருகிறது என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் (ஸ்டாா்ட்-அப்) எண்ணிக்கை கடந்த 2016-17-இல் 726-ஆக இருந்தது. 2021-22-இல் அந்த எண்ணிக்கை 66,810-ஆக அதிகரித்துள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com