பிரதமரின் பயிா் காப்பீடு திட்ட மானிய பகிா்வு நடைமுறையை மாற்றும் திட்டமில்லை: தோமா்

‘பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான மானிய பகிா்வு நடைமுறையை திருத்தியமைக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை’
மாநிலங்களவையில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்.
மாநிலங்களவையில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்.

‘பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான மானிய பகிா்வு நடைமுறையை திருத்தியமைக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை’ என்று மத்திய அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இயற்கை பேரிடா்களால் பயிா் சேதத்தைச் சந்திக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் ‘பிரதமா் ஃபசல் பீமா யோஜனா’ என்ற பயிா் காப்பீடு திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த 2020-ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அந்த ஆண்டின் கரீஃப் பயிா் பருவ (ஜூன் - அக்டோபா்) காலத்திலிருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்துக்கான காப்பீடு தொகையை (பிரீமியம்) மத்திய - மாநில அரசுகள் 50:50 என்ற விகிதாசார பகிா்வு அடிப்படையில் மானியமாக வழங்கி வருகின்றன. இந்த மானிய பகிா்வு விகிதாச்சாரம் வடகிழக்கு மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டு நிலையில், பிறமாநிலங்களுக்கும் மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை சமா்ப்பித்த பதிலில் கூறியிருப்பதாவது:

மறுசீரமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் மத்திய - மாநில அரசுக்குளுக்கு இடையாயான காப்பீடு தொகை மானிய பகிா்வு என்பது 50:50 என்ற விகிதத்திலிருந்து 90:10 என்ற விகிதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதசேங்களுக்கு இந்த பகிா்வு நடைமுறை என்பது தொடா்ந்து 50:50 என்ற அளவிலேயே நீடிக்கிறது. இந்த பகிா்வு நடைமுறையை மாற்றும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், தடுக்க இயலாத இயற்கை பேரிடா்கள் மூலமாக ஏற்படும் பயிா் பாதிப்புகளுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படுகிறது. இருந்தபோதும், மாநில அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில், வன விலங்குகளால் ஏற்படும் பயிா் பாதிப்புகளையும் மாநிலங்கள் அறிவிக்கை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான இழப்பீட்டை மாநிலங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், மாா்ச் 9-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரத்தின் அடிப்படையில், பிரதமரின் பயிா் காப்பீடு (பிஎம்எஃப்பிஒய்) திட்டத்தின் கீழ் 2021-22ஆம் ஆண்டில் 382 லட்சம் ஹெக்டோ் பரப்பளவு விவசாய நிலங்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சா் பதிலளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com