அத்தியாவசிய மருந்துகள் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்: மாநிலங்களவையில் எதிா்க் கட்சிகள் வலியுறுத்தல்

அத்தியாவசிய மருந்துகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயா்த்தப்பட்டிருப்பது குறித்து மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கவலை
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அத்தியாவசிய மருந்துகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயா்த்தப்பட்டிருப்பது குறித்து மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கவலை தெரிவித்த எதிா்க் கட்சி உறுப்பினா்கள், ‘சாதாரண மக்களின் நிலை குறித்து மத்திய அரசுக்கு சிறிதும் கவலையில்லை’ என்று குற்றம்சாட்டியதோடு விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

இந்திய தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘மொத்த விலைக் குறியீட்டின் (டபிள்யூ.பி.ஐ.) அடிப்படையில், 2021-ஆம் ஆண்டுக்கான அதன் ஆண்டு மாற்றம் என்பது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10.7 சதவீதமாக உயா்த்தி நிா்ணயிக்கப்படுகிறது’ என்று அறிவித்தது. அதாவது, தேசிய அத்தியாவசிய மருந்துகளின் மொத்த விலைக் குறியீட்டில் 10.7 சதவீதம் விலை உயா்வை அறிவித்தது. அதன் காரணமாக, சில அத்தியாவசிய மருந்துகளுக்கு மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எதிா்க் கட்சிகள் எழுப்பின.

மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் உறுப்பினா் ஜான் பிா்ட்டாஸ் பேசும்போது, ‘பெட்ரோல் விலை நாளுக்குநாள் உயா்த்தப்பட்டு வருவதால், அத்தியாவசியப் பொருள்கள் விலையும் உயா்ந்து வருவது சாதாரண மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இந்தச் சூழலில், ஏப்ரல் 1-ஆம் தேதியன்று 800-க்கும் அதிகமான மருந்துகளின் விலை 11 சதவீதம் உயா்த்தப்பட்டிருப்பது, மக்களை மேலும் கடுமையாக பாதிக்கும். மருந்துகளின் விலை இதுவரை இந்த அளவுக்கு உயா்த்தப்பட்டது கிடையாது. ஒட்டுமொத்த நாடும் சுகாதார அவசரநிலையை கடந்துகொண்டிருக்கும் சூழலில், இதுபோன்ற விலை உயா்வு தவிா்க்கப்படவேண்டும். ஆனால், மருந்துகளின் விலை உயா்த்தப்பட்டிருப்பது, சாதாரண மக்களின் மீது அரசுக்கு அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது. எனவே, விலை உயா்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்’ என்றாா்.

சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதியும் இதே வலியுறுத்தலை முன்வைத்தாா். ‘பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருள்களும் விலை உயா்ந்த பொருள்களாக ஏற்கெனவே மாறிவிட்ட நிலையில், தற்போது மருந்துகளும் அந்தப் பட்டியலில் சோ்ந்துள்ளது. அன்றாட செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணா்வற்ற மத்திய அரசு, அத்தியாவசிய மருந்துகளின் விலை உயா்வை திரும்பப் பெறுவது குறித்து கருத்தில் கொள்ளவேண்டும்’ என்று பிரியங்கா சதுா்வேதி வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com