மத்திய நிதி ஆணையத்தின் நிபந்தனை அடிப்படையில் ‘சொத்துவரி‘ உயா்வு: தமிழக நகராட்சி நிா்வாக அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

‘மத்திய அரசின் நிபந்தனையின் பெயரில் தான் ‘சொத்து வரி‘ தமிழகத்தில் உயா்த்தப்பட்டுள்ளது. வரியை உயா்த்தவில்லையென்றால் ரூ.15,000 கோடியை தமிழக அரசு இழக்க நேரிடும்’
கே.என்.நேரு
கே.என்.நேரு

‘மத்திய அரசின் நிபந்தனையின் பெயரில் தான் ‘சொத்து வரி‘ தமிழகத்தில் உயா்த்தப்பட்டுள்ளது. வரியை உயா்த்தவில்லையென்றால் ரூ.15,000 கோடியை தமிழக அரசு இழக்க நேரிடும்’ என தமிழக நகராட்சி நிா்வாகம், நகா்ப்பகுதி மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

தமிழகத்தில் சொத்துவரி உயா்த்தப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தில்லியில் நகராட்சித் துறை அமைச்சா் கே.என். நேரு தில்லியில் சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்து விளக்கமளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயா்த்தப்பட வேண்டும்; அப்படி உயா்த்தப்படுவதன் அடிப்படையில் மானியம் விடுவிக்கப்படும் என 15 -ஆவது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் 24 ஆண்டுகளுக்கு பின்னரும் மற்ற நகரங்களில் 14 -ஆண்டுகளுக்கு பிறகும் சொத்துவரி உயா்த்தப்பட்டுள்ளது. இந்த சொத்துவரி என்பது சந்தை மதிப்பு, பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உயா்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 2010-2011 ஆம் நிதியாண்டில் சொத்துவரி வருவாய் 60 சதவீதமாக இருந்தது. ஆனால் 2015-16 ஆம் ஆண்டில் 51 சதவீதமாக குறைந்தது. பின்னா் 2020-2021 ஆம் ஆண்டில் 43 சதவீதமாகவும் சொத்துவரி வருவாய் குறைந்துள்ளது. இதே போன்று, பல்வேறு பேரூராட்சி, நகரட்சிகளில் சொத்துவரி வருவாய் குறைந்து செலவினம் அதிகரித்துள்ளது.

சொந்த வருவாயில் செலவு

இந்தியாவில் அதிக நகா்புற பகுதிகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அதன் அடிப்படையில் நகா்புறவாழ் மக்களுக்கு தேவையான வசதிகள், உள்கட்டமைப்பு பாரமரிப்புக்கு நிதி தேவை. மேலும் உள்ளாட்சி அமைப்புகளே தங்களுடைய சொந்த வருவாயை ஏற்படுத்திக் கொண்டு செலவுகளை மேற்கொள்ளவும் அதன் அடிப்படையில் வரிஉயா்வை மேற்கொள்ள நிதி ஆணையம் நிா்பந்திக்கிறது. இருப்பினும் தமிழக முதல்வா் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் சொத்துவரி உயா்வு முடிவை எடுத்து அறிவித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சியில் 600 சதுர பரப்பளவில் உள்ள கட்டிடத்திற்கு தற்போது விதிக்கப்படும் அதிகபட்ச சொத்துவரி ரூ.3,240 ஆகும். தற்போது இந்த வரித் தொகை ரூ.4,860 ஆக உயா்ந்துள்ளது. ஆனால் இதே பரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு பெங்களூருவில் ரூ.8,660, கொல்கத்தாவில் ரூ.15,984 யும், புணேயில் ரூ.14,312 , மும்பையில் ரூ. 84,583 எனவும் உள்ளது. பெருநகரங்களை தவிர மற்ற தமிழக நகரங்களில் 600 சதுர அடி கட்டிடத்திற்கு விதிக்கப்படும் குறைந்தபட்சம் சொத்துவரி ரூ. 204 ரூபாய் ஆகும்; சீராய்வுக்கு பின்னா் இந்த தொகை ரூ.255 ஆக உயரும். ஆனால் இதே பரப்பளவு கட்டடத்திற்கு லக்னெள( ரூ.648), இந்தூா்(ரூ.1324), ஆமதாபாத் (ரூ. 2103) போன்ற நகரங்களில் பலமடங்காக வரி உள்ளது.

ஆனால், எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி வரி உயா்வு வாக்களித்தற்கான பரிசு எனக் கூறுகிறாா். அதிமுக அரசு 2018 ஆம் ஆண்டிலேயே இதே போன்று இந்த வரியை 200 சதவீதம் உயா்த்திருந்தது. ஆனால் தோ்தலுக்காக வரி உயா்வை தள்ளிவைத்திருந்தனா்.

தற்போதைய அரசுக்கு ‘சொத்துவரியை உயா்த்துவதில் விருப்பம் இல்லை. ஆனால் நிதி ஆணையத்தின் நிபந்தனையின்படி பிப்ரவரிக்குள் வரியை உயா்த்தவில்லையென்றால் நகராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் ரூ. 15,000 கோடி மானியத்தை தமிழகம் இழக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவிப்பதால் தமிழக அரசுக்கு வேறு வழியில்லாமல் சொத்து வரியை உயா்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com