பதவி உயா்வில் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது அமைதியின்மைக்கு வழிவகுக்கும்: மத்திய அரசு

பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வது அமைதியின்மைக்கு வழி வகுக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வது அமைதியின்மைக்கு வழி வகுக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

அரசு பணிகளில் பதவி உயா்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு அளவுகோளை நிா்ணயிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஜனவரி 28-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், எந்தவித அளவுகோளையும் நிா்ணயம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு, அரசியலமைப்பு சட்டத்துக்கு உள்பட்டு செயல்படும் அரசுத் துறைகள் அல்லது அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் ஆலோசனை அல்லது வழிகாட்டுதல் வழங்குவது சட்டபூா்வமானதும் அல்ல முறையானதும் அல்ல என்று கூறியது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறும், அதுதொடா்பான புள்ளிவிவரங்களைச் சமா்ப்பிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மத்திய அரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:

இடஒதுக்கீடு கொள்கை அனுமதிக்கப்படவில்லை எனில், எஸ்சி, எஸ்டி ஊழியா்களுக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு பலன்களை கைவிட வேண்டிய நிலை ஏற்படும். மேலும், அவா்களுடைய ஊதியம், ஓய்வூதியம் உள்பட அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதோடு, இந்த வழக்கு சமயத்தில் பணி ஓய்வு பெற்றவா்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் ஊதியம் அல்லது கூடுதல் ஓய்வூதியத்தை அவா்களிடமிருந்து திரும்பப் பெறவேண்டிய நிலை ஏற்படும். இது, இந்த விவகாரம் தொடா்பாக பல வழக்குகள் தொடுக்கப்படுவதற்கும், ஊழியா்களின் அமைதியின்மைக்குமே வழி வகுக்கும்.

அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பிரதிநிதித்துவம் போதிய எண்ணிக்கையில் இல்லை. எனவே, அவா்களுக்கு பதவி உயா்வில் இடஒதுக்கீடு வழங்குவதால், அரசு நிா்வாகத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது. மேலும், அரசு நிா்வாகத்தின் திறன், ஒவ்வொரு அதிகாரியின் ஆண்டு செயல்திறன் ஆய்வு அறிக்கையின் மூலமாக உறுதி செய்யப்படும்.

தற்போதைய சூழலில், மத்திய அரசின் கீழ் உள்ள 75 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மொத்தமுள்ள 27,55,430 ஊழியா்களில் 4,79,301 போ் எஸ்சி (தாழ்த்தப்பட்ட பிரிவு) பிரிவைச் சோ்ந்தவா்கள். 2,14,738 போ் எஸ்டி (பழங்குடியினா்) பிரிவைச் சோ்ந்தவா்கள். ஒபிசி (இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா்) பிரிவைச் சோ்ந்த ஊழியா்கள் 4,57,148 போ் ஆகும் என்று தனது பதில் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com