‘குடும்ப அரசியல் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை’: பிரதமர் மோடி உரை

குடும்ப அரசியல் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உரையாற்றினார்.
நரேந்திர மோடி
நரேந்திர மோடி

நாடு முழுவதும் பாஜக நிறுவன நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையொட்டி 14 நாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏப். 7-ஆம் தேதி முதல் ஏப்.14 வரை “இருவார கால சமூக நீதி கொண்டாட்டம்” என்ற பெயரில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இன்று காலை தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொடியேற்றத்துடன் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வை, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய திரைகள் மூலம் தொண்டர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.

பிரதமர் மோடி பேசியதாவது:

“கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலுள்ள பாஜக தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தாண்டு நிறுவன நாள் மிகவும் முக்கியமானது. இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

முதலாவது, 75-வது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டம், இரண்டாவது, வேகமாக மாறிவரும் உலகளாவிய நிலைமையில் இந்தியாவுக்கு தொடர்ந்து புதிய வாய்ப்புகள் வருகின்றன.

இறுதியாக, இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் மேலும் 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், 30 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் நமது கட்சியின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் 180 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இக்கட்டான சூழலை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. மக்கள் பசியுடன் தூங்காமல் இருப்பதற்காக மத்திய அரசு ரூ. 3.5 லட்சம் கோடி செலவழிக்கிறது.

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் செய்துள்ளன. பாஜக மட்டுமே அதற்கு மாற்றாக செயல்பட்டு வருகின்றது.

மத்திய அரசின் சலுகைகள் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

14 நாள்கள் நடைபெறும் பாஜக நிறுவன தின நிகழ்ச்சிகளில், ஏப். 7 அன்று மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத், ஜன ஒளஷதி (மக்கள் மருந்தகம்) திட்டங்கள் குறித்து பாஜக எம்.பி.க்கள் பிரசாரம் மேற்கொள்வர்.

ஏப். 8 மத்திய அரசின் பாரத பிரதமர் வீட்டு வசதி உதவித் திட்டம் குறித்தும், ஏப். 9 மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்தும் பிரசாரம் மேற்கொள்கின்றனர். ஏப். 9 சமூக சீர்த்திருத்தவாதி ஜோதிராவ் புலே பிறந்த நாளையும், ஏப்.14 -ஆம் தேதி பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாளையும் பாஜகவினர் கொண்டாடுகின்றனர். இந்த இரு நிகழ்ச்சிகளும் பாஜக சார்பில் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. ஏப். 12 கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.

தவிர மத்திய அரசின் இலவச உணவு திட்டம், பழங்குடியினரைத் தொடர்பு கொள்ளுதல், அமைப்பு சாரா தொழிலாளர்களை அணுகுதல், நிதிசார் திட்டங்கள், ஊட்டச்சத்து திட்டங்கள் குறித்து தலா ஒரு நாள் பாஜகவினர் பிரசாரம் செய்கின்றனர்.

தற்போது சுதந்திர தின அம்ருத் மகோத்சவ் திருவிழா நடைபெறும் இடங்களில் பாஜக உறுப்பினர்கள் தங்கள் பகுதி குளங்களை சீரமைக்குமாறு பிரதமர் மோடி இந்நிகழ்ச்சி தொடக்கத்தின்போது கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com