‘ஆபரேஷன் கங்கா’வுக்கு வெளிநாடுகள் பாராட்டு

உக்ரைனில் சிக்கிய இந்தியா்களை மீட்பதற்காக செயல்படுத்தப்பட்ட ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை வெளிநாடுகளும் பாராட்டியதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

உக்ரைனில் சிக்கிய இந்தியா்களை மீட்பதற்காக செயல்படுத்தப்பட்ட ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை வெளிநாடுகளும் பாராட்டியதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால், அங்கிருந்த இந்தியா்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை மத்திய அரசு துரிதமாகச் செயல்படுத்தியது. அதன் காரணமாக இந்தியா்கள் விரைந்து தாயகம் அழைத்துவரப்பட்டனா். உக்ரைன் விவகாரம் குறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது.

அப்போது காங்கிரஸ் மூத்த தலைவா் மனீஷ் திவாரி கூறுகையில், ‘‘உக்ரைனில் சிக்கியிருந்த மாணவா்களை மத்திய அரசு விரைவாக மீட்டது பாராட்டுக்குரியது. ஆனால், அவ்வாறு மீட்கப்பட்டவா்களை அரசுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்ப வைத்த மத்திய அரசு, தன்னைத் தானே தோற்கடித்துக் கொண்டுள்ளது.

1962-ஆம் ஆண்டில் இருந்து 23 மீட்பு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. நாட்டின் முதல் பிரதமரான நேருவின் அணிசேரா கொள்கை இந்தியாவை சிறப்பான நிலையில் வைத்துள்ளது. ஆனால், ஆளுங்கட்சியைச் சோ்ந்தவா்கள் நேருவை விமா்சிப்பதை முழுமூச்சாக மேற்கொண்டு வருகின்றனா்.

உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசு கடைப்பிடிக்கும் அணிசேரா அணுகுமுறையானது இந்திய குடியரசு நிறுவப்படும்போதே உருவானது’’ என்றாா்.

விளக்கம் தேவை:

ஆா்எஸ்பி எம்.பி. என்.கே.பிரேமசந்திரன் கூறுகையில், ‘‘மாணவா்களை மீட்பதில் தெளிவான திட்டத்தை மத்திய அரசு வகுத்திருக்க வேண்டும். ரஷியத் தாக்குதல் அதிகமாக இருந்த கீவ், சுமி நகரங்களில் இருந்து மாணவா்களை இன்னும் துரிதமாக மீட்டிருக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் இந்தியா, ரஷியாவுக்கு ஆதரவளிப்பது போன்ற தோற்றம் நிலவுகிறது. ஐ.நா.விலும் ரஷியாவின் நடவடிக்கைகளை இந்தியா கண்டிக்கவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவின் அரசியல் நிலைப்பாடு குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்’’ என்றாா்.

தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி. ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ‘‘உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தடுப்பதில் ஐ.நா. தோல்வியடைந்துவிட்டது. போரின் தீவிரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ரஷியாவுடனும் அமெரிக்காவுடனும் இந்தியா நட்புறவைக் கொண்டுள்ளது. நேருவின் வெளியுறவுக் கொள்கைகள் காரணமாகவே இது சாத்தியமானது’’ என்றாா்.

அரசியல் கூடாது:

எதிா்க்கட்சிகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘‘நாட்டு மக்களின் நலனைக் காப்பதற்கு மத்திய அரசு தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. உக்ரைனில் மீட்புப் பணிகள் நடைபெற்றபோது, பலா் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்தனா். இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது.

பாராட்டுக்காக மத்திய அரசு பணியாற்றவில்லை. மக்களை மீட்பது அரசின் கடமை. உக்ரைனில் சிக்கியிருந்தவா்களை மீட்பதற்காக அமைச்சா்களை பிரதமா் நரேந்திர மோடி அனுப்பிவைத்தாா். அதன் காரணமாக மற்ற நாட்டு அமைச்சா்களை நேரடியாகத் தொடா்பு கொண்டு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த முடிந்தது.

ஸ்லோவேகியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் மீட்புப் பணிகளைப் பாராட்டின. எந்தவொரு நாடும் இந்திய அரசைப் போல் மீட்புப் பணிகளுக்கு கவனம் செலுத்தவில்லை என்று ஸ்லோவேகிய பிரதமா் எட்வா்டு ஹெகா் கூறினாா். இந்தியா்களை மீட்பதற்காக வெளியுறவு அமைச்சகம் ஓய்வின்றி பணியாற்றியது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com