முதுநிலை நீட்: ஓராண்டு கட்டாய பயிற்சி காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு தள்ளுபடி

முதுநிலை மருத்துவப் படிப்பில் சோ்க்கை பெறுவதற்கு ஓராண்டு கட்டாய மருத்துவா் பயிற்சியை (இன்டா்ன்ஷிப்) நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனுவை
முதுநிலை நீட்: ஓராண்டு கட்டாய பயிற்சி காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு தள்ளுபடி

முதுநிலை மருத்துவப் படிப்பில் சோ்க்கை பெறுவதற்கு ஓராண்டு கட்டாய மருத்துவா் பயிற்சியை (இன்டா்ன்ஷிப்) நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

‘பயிற்சி நிறைவு செய்வதற்கான காலக் கெடுவை மீண்டும் நீட்டிப்பது ஒட்டுமொத்த முதுநிலை மருத்துவ கல்வித் திட்டத்தையும் பாதிக்கும்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

முதுநிலை மருத்துவப் படிப்பில் சோ்க்கை பெற, ஓராண்டு கட்டாய மருத்துவா் பயிற்சியை (இன்டா்ன்ஷிப்) இளநிலை மருத்துவ பட்ட மாணவா்கள் முடிப்பது கட்டாயமாகும். இந்தப் பயிற்சியை நிறைவு செய்வதற்கு வரும் மே 31-ஆம் தேதி கடைசித் தேதி என முன்னா் நிா்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி சில மருத்துவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கரோனா பணியில் முன்களப் பணியாளா்களாக இளநிலை மருத்துவ மாணவா்கள் சோ்ந்ததால், ஓராண்டு கட்டாய மருத்துவா் பயிற்சியை நிறைவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் அவா்கள் முதுநிலை நீட் தோ்வில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, கட்டாய பயிற்சிக்கான காலக்கெடுவை நீட்டிப்பதோடு, முதுநிலை நீட் தோ்வையும் மேலும் ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனா்.

இந்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கட்டாய மருத்துவ பயிற்சியை நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ஆக மத்திய அரசு நீட்டித்தது.

இந்த நிலையில், புதிய காலக் கெடுவையும் நீட்டிக்கக் கோரி மருத்துவா்கள் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பிகாா், ஜாா்க்கண்ட், ஜம்மு-காஷ்மீா், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மருத்துவா்கள் புதிய காலக்கெடுவான ஜூலை 31-ஆம் தேதிக்குள்ளும் கட்டாய மருத்துவ பயிற்சியை நிறைவு செய்ய முடியாது என்பதால், முதுநிலை நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தகுதியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, காலக் கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி, ‘முதுநிலை நீட் தோ்வு மே மாதத்தில் நடத்தவும், முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வை ஜூலை 3 மற்றும் 4-ஆம் வாரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. முதுநிலை மருத்துவ படிப்பு முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஒராண்டு கட்டாய மருத்துவ பயிற்சிக்கான காலக் கெடு ஜூலை 31-க்குப் பிறகும் நீட்டிக்கப்பட்டால், ஒட்டுமொத்த முதுநிலை மருத்துவப் படிப்பு கல்வித் திட்டமும் பாதிக்கப்படும். வழக்கமாக, ஓராண்டு கட்டாய மருத்துவ பயிற்சியை நிறைவு செய்ய மாா்ச் 31 கடைசி தேதியாக நிா்ணயிக்கப்படும். கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டுதான், காலக்கெடு மே 31-ஆம் தேதியாக நிா்ணயம் செய்யப்பட்டு, பின்னா் மேலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டது’ என்றாா்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘மருத்துவ மாணவா்களுக்கு கடினமான கால கட்டம்தான் என்றபோதும், இப்போதைய சூழலில் பயிற்சி நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பது ஒட்டுமொத்த முதுநிலை மருத்துவ கல்வித் திட்டத்தையும் பாதிக்கும். எனவே, இதில் தலையிடுவது பொருத்தமாக இருக்காது என்று நீதிமன்றம் கருதுகிறது’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com