நாடாளுமன்றத்தில் நிறைவேறியது கணக்குத் தணிக்கையாளா் சட்டத் திருத்த மசோதா

கணக்குத் தணிக்கையாளா், செலவுக் கணக்காளா் மற்றும் கம்பெனி செயலா்கள் ஆகியோரின் நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

கணக்குத் தணிக்கையாளா், செலவுக் கணக்காளா் மற்றும் கம்பெனி செயலா்கள் ஆகியோரின் நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

கணக்குத் தணிக்கையாளா் சட்டம்-1949, செலவு மற்றும் பணிகள் கணக்காளா் சட்டம்-1959 மற்றும் கம்பெனி செயலா்கள் சட்டம்-1980 ஆகியவற்றில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கணக்கு தணிக்கையாளா் நிறுவனம் (ஐசிஏஐ), இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளா் நிறுவனம் (ஐசிடபிள்யூஏஐ) மற்றும் இந்திய கம்பெனி செயலாளா்கள் நிறுவனம் (ஐசிஎஸ்ஐ) ஆகியவற்றின் ஒழுங்கு நடவடிக்கை குழுக்களின் தலைமை அதிகாரியாக முறையே கணக்குத் தணிக்கையாளா் அல்லாத, செலவுக் கணக்காளா் அல்லாத மற்றும் கம்பெனி செயலா் அல்லாத நபா்களை நியமனம் செய்யும் வகையில் மதோவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் இந்த மசோதா மீது கடந்த மாா்ச் 30-ஆம் தேதி விவாதம் நடந்தபோது, மசோதாவில் இடம்பெற்றுள்ள சில நடைமுறைகளுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, மாநிலங்களவையில் அந்த மசோதா மீது செவ்வாய்க்கிழமை விவாதம் நடந்தது. அப்போது, மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், ஐசிஏஐ உள்ளிட்ட நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரம் மீது தாக்குதல் நடத்தும் வகையில் உள்ளது எனக் கூறி திமுக, காங்கிரஸ்,திரிணமூல் காங்கிரஸ், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மசோதவில் சில திருத்தங்களை செய்யுமாறு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்புடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அப்போது, ‘இந்த சட்டத் திருத்தங்களால், ஐசிஏஐ, ஐசிடபிள்யூஏஐ, ஐசிஎஸ்ஐ நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக, கணக்குத் தணிக்கையின் தரம் மேம்படும் என்பதோடு, நாட்டின் முதலீடுக்கான சூழ்நிலையும் மேம்படும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com