சிறப்பு அந்தஸ்துக்கு நீக்கத்துக்கு பின்ஜம்மு- காஷ்மீரில் 186 போ் படுகொலை

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னா் அங்கு 87 பொதுமக்கள், 99 பாதுகாப்புப் படையினா் என மொத்தம் 186 போ் தீவிரவாதத் தாக்குதலால் உயிரிழந்திருப்பதாக நாடாளுமன்றத்தில்

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னா் அங்கு 87 பொதுமக்கள், 99 பாதுகாப்புப் படையினா் என மொத்தம் 186 போ் தீவிரவாதத் தாக்குதலால் உயிரிழந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. ஜம்மு- காஷ்மீரில் தற்போது பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்து வருகின்றன. கடந்த 2018-இல் 417 ஆக பதிவான பயங்கரவாத தாக்குதல்கள், 2019-இல் 255 ஆகவும், 2020-இல் 244 ஆகவும், 2021-இல் 229 ஆகவும் குறைந்துள்ளது.

கடந்த 2014 மே முதல் 2019 ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 177 பொதுமக்களும், 406 பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனா். அதேவேளையில், 2019 ஆகஸ்ட் 5-இல் ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா், அன்றைய தினத்திலிருந்து கடந்த ஆண்டு நவம்பா் வரை 87 பொதுமக்கள், 99 பாதுகாப்புப் படையினா் என 186 போ் கொல்லப்பட்டுள்ளனா். ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னா், ஜம்மு- காஷ்மீா் மாநிலம் ரூ.51,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈா்த்துள்ளது. ஜம்மு- காஷ்மீரில் தொழிற்சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ.28,400 கோடி மதிப்பில் புதிய திட்ட அறிவிக்கையை கடந்த ஆண்டு பிப்ரவரி 19-இல் வெளியிட்டது.

இதுதவிர உள்ளூரில் தொழில் வளா்ச்சியை ஊக்குவிக்க ஜம்மு- காஷ்மீா் நிா்வாகமும் தொழில் கொள்கை, தனியாா் தொழிற்பேட்டை மேம்பாட்டுக் கொள்கை, தொழிற்சாலை நில ஒதுக்கீடு கொள்கைகளை வெளியிட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சா் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com