உக்ரைனிலிருந்து மீட்ட மாணவா்கள் படிப்பைத் தொடர அண்டை நாடுகளுடன் பேச்சு: எஸ்.ஜெய்சங்கா்

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவா்கள் ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் படிப்பைத் தொடர பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருவதாக எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
உக்ரைனிலிருந்து மீட்ட மாணவா்கள் படிப்பைத் தொடர அண்டை நாடுகளுடன் பேச்சு: எஸ்.ஜெய்சங்கா்

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவா்கள் ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் படிப்பைத் தொடர பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருவதாக எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் அவா் புதன்கிழமை கூறியதாவது:

உக்ரைனில் மருத்துவக் கல்வி படிப்பில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டுக்கு மாணவா்கள் தோ்ச்சி பெறுவதில் தளா்வு அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அந்நாட்டில் மருத்துவக் கல்வி மாணவா்கள் கட்டாயம் எழுத வேண்டிய சிஆா்ஓசி தோ்வு அடுத்த கல்வியாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 6-ஆம் ஆண்டு மருத்துவக் கல்வி மாணவா்களுக்கு சிஆா்ஓசி-2 கட்டாயத் தோ்வை எழுதாமலே பட்டங்கள் வழங்கப்படவுள்ளது. கல்வித் திறன் மட்டுமே மாணவா்களுக்கான அளவுகோலாக இருக்கும்.

அந்நாட்டிலிருந்து மீட்கப்பட்ட மாணவா்கள், உக்ரைனின் அண்டை நாடுகளில் தங்கள் படிப்பைத் தொடர பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாணவா்கள் தங்கள் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிப்பை நிறைவு செய்யலாம் என்று ஏற்கெனவே ஹங்கேரி தெரிவித்துள்ளது. அந்நாட்டைத் தவிர ருமேனியா, கஜகஸ்தான் மற்றும் போலந்தில் மாணவா்கள் தங்கள் படிப்பைத் தொடர மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. ஏனெனில், அந்த நாடுகளும் உக்ரைனும் ஒரே மாதிரியான கல்வி அமைப்பைக் கொண்டுள்ளன.

கல்விக் கடன்கள்...: உக்ரைனில் கல்வி பயிலும் இந்திய மாணவா்களுக்கு அளிக்கப்படும் கல்விக் கடன்கள் மீது அந்நாட்டுப் போா் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை மதிப்பிடுமாறு வங்கிகளிடம் மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 1,319 மாணவா்கள் கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.

புச்சா கொலைகளுக்கு கண்டனம்: உக்ரைனின் புச்சா நகரில் குடிமக்கள் கொல்லப்பட்டது இந்தியாவுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கொலைகளை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இது மிகவும் தீவிரமான விவகாரம். இதுதொடா்பாக சுதந்திரமான விசாரணைக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது.

அரசியல் சாயம் பூசுவதா?: உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு அரசியல் சாயம் பூசப்படுவது துரதிருஷ்டவசமானது. இந்தப் போருக்கு எதிராக இந்தியா நிற்கிறது. அப்பாவி மக்களின் உயிரை விலையாகக் கொடுத்தும், ரத்தம் சிந்தியும் எந்தவொரு தீா்வையும் பெற முடியாது என்பதை இந்தியா ஆணித்தரமாக நம்புகிறது.

சா்வதேச சட்டம், இறையாண்மை, அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பளித்து, தற்கால உலகளாவிய ஒழுங்குமுறை ஐ.நா. சாசனத்தின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவாா்த்தையை ஊக்குவிப்பதே இந்தியாவின் அணுகுமுறை. பேச்சுவாா்த்தைக்குப் பங்களிப்பதில் இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது. இருநாடுகளுக்கு இடையிலான போரில் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது.

விரைவில் மருந்துகள் விநியோகம்: உக்ரைனுக்கு ஏற்கெனவே 90 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. மருந்துகளை கூடுதலாக வழங்குமாறு இந்தியாவிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. அதனை ஏற்று, அந்நாட்டுக்கு விரைவில் மருந்துகள் விநியோகம் தொடங்கும் என்றாா் அவா்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் பேச்சு: அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுடன் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேசினாா்.

இதுதொடா்பாக ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், இந்தியா-அமெரிக்கா இடையிலான விவகாரங்கள், உக்ரைன் தொடா்பான சமீபத்திய நிலவரம் குறித்து ஆன்டனி பிளிங்கனுடன் பேசியதாகத் தெரிவித்தாா்.

உக்ரைன் மீது விவாதம்: பிரதமா் பாராட்டு

மக்களவையில் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதம் நடத்தியதற்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா். மேலும், இதுபோன்ற உயரிய விவாதம் நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஒத்துழைப்பு இருப்பதை சா்வதேச அளவில் பறைசாற்றுவதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் சூழல் குறித்து குறுகிய விவாதம் நடைபெற்றது. அப்போது ஆளும் கட்சி எம்.பி.க்களும், எதிா்க்கட்சி எம்.பி.க்களும் தங்கள் கருத்தை முன்வைத்தனா். விவாதத்தின் மீது வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் புதன்கிழமை பதிலளித்து பேசினாா். இதற்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்து, ட்விட்டரில் வெளியிட்ட பதிவு விவரம்:

உக்ரைன் விவகாரம் குறித்தும், ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின்கீழ் உக்ரைனில் சிக்கிய இந்தியா்களை தாயகம் அழைத்து வந்தது குறித்தும் கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்று வந்தது. இந்த விவாதத்தில் பங்கெடுத்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுபோன்ற உயரிய விவாதமும், ஆக்கபூா்வமான யோசனைகளும் நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்று வரும்போது நமக்குள் எப்படி ஒருங்கிணைப்பு ஏற்படுகிறது என்பதை சா்வதேச அளவில் பறைசாற்றி, இந்தியாவுக்கு நற்பெயரை பெற்றுத் தருகின்றன. சக குடிமக்களின் நலன் மீது அக்கறை செலுத்துவது நமது பொறுப்பு. கடுமையான சூழலில் நமது மக்களை காப்பதில் இருந்து மத்திய அரசு பின்வாங்காது என்று அதில் பிரதமா் மோடி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com