முல்லைப் பெரியாறு வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் நீர்பங்கீடு உள்ளிட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
முல்லைப் பெரியாறு வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்
முல்லைப் பெரியாறு வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் நீர்பங்கீடு உள்ளிட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

அதேவேளையில், நீர்திறப்பு, நீர்திறப்பு குறைப்பு உள்பட அனைத்து முடிவுகளையும் மேற்பார்வை குழுவே எடுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, நீர் தேக்கிவைக்கும் அளவு ஆகியவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் கேரளம், தமிழக அரசுகளின் தரப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம்-கேரளம் இடையே நிலவும் அணை தொடர்பான பிரச்னைக்கு அணை பாதுகாப்புச் சட்டம் தீர்வுகாணும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, அணை பாதுகாப்புச் சட்டமும், தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையமும் எப்போது நடைமுறைக்கு வரும்? அணை சார்ந்த விவகாரங்களை ஆணையம் எப்போது கண்காணிக்கத் தொடங்கும்? என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இதுதொடர்பான விசாரணை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி, "அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் முழுமையாகச் செயல்பட ஒரு வருடம் ஆகும். அதேவேளையில் தற்காலிக கட்டமைப்பு ஒரு மாதத்துக்குள் செயல்படும். நாங்கள் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைப்பது என்னவெனில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டது. அந்த அமைப்பு அதன் பணியைத் தொடரலாம் என்பதுதான். 

ஏற்கெனவே, தமிழகம், கேரளத்தில் இருந்து இந்தக் குழுவில் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். இரு மாநில தலைமைச் செயலாளர்கள் குழுவில் தலா ஒரு நிபுணரை நியமிக்குமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொள்ளலாம்' என்றார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு கூறியதாவது: மேற்பார்வைக் குழுவைத் தொடரலாம் என்று நீங்கள் பரிந்துரைப்பதால், இந்த நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஒதுக்கப்பட்ட பணியுடன் கூடுதலாக, வழக்கமான குழு அமைக்கப்படும் வரை, இந்த அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அனைத்துச் சட்டபூர்வ செயல்பாடுகளையும் மேற்பார்வைக் குழு மேற்கொள்ளும். இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் இந்தக் குழுவால் கவனிக்கப்படும். இது ஒரு பணிக்கான ஏற்பாடாக இருக்கும். இது வழக்கமான ஏற்பாடு அல்ல. மேலும், ஒரு வருட காலக்கெடு குறித்து வழங்கப்பட்ட உத்தரவாதத்தையும் நீதிமன்றம் பதிவு செய்துகொள்ளும். இந்த நீதிமன்றம் மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வைக் குழு நிறைவேற்றும்.

ஆகவே, இந்த முல்லைப் பெரியாறு அணையைப் பொருத்தவரை, தேசியக் குழு தற்போதைக்கு தலையிடாது.

அணையின் உறுதித்தன்மை மற்றும் அதன் கட்டமைப்பு பிரச்னை ஒரு நுட்பமான சூழலாகும். இந்த விவகாரத்தில் நீங்கள் அனைவரும் சில நல்லதொரு ஆலோசனைகளை வழங்கலாம். இது தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய எளிய ஏற்பாடாகும்.

மத்திய அரசுக்குக்கூட இப்போதைக்கு இந்த விவகாரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆணையமும் அமைக்கப்படவில்லை.

இதனால், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேற்பார்வைக் குழுவுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கும். அப்போதுதான், சட்டத்தின்கீழ் செயல்பாடுகள் மற்றும் கடமைகளை மேற்பார்வைக் குழுவால் திறம்பட செயல்படுத்த முடியும்' என்று கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

முன்னதாக, விசாரணையின்போது கேரள, தமிழக தலைமைச் செயலாளர்கள் இருவரும், குழுவில் தலா ஒரு நிபுணரை நியமிக்குமாறு நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, "மேற்பார்வைக் குழுவை வலுப்படுத்துவோம்' என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அவை பயனற்றதாகிவிடும் என்று ஐஸ்வர்யா பாட்டி கூறியபோது, நீதிமன்றத்தின் உடனடி கவனம் தேவைப்படும் ஏதேனும் விவகாரம் இருந்தால் மேற்பார்வைக் குழு உடனடியாக நீதிமன்றத்தை அணுகுவதற்கான சுதந்திரம் அளிக்கப்படும்' என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com