பிரதமா் மோடியை சந்தித்தாா் சரத் பவாா்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
பிரதமா் மோடியை சந்தித்தாா் சரத் பவாா்

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு தலைமை வகிக்க மாட்டேன் என்று பவாா் அண்மையில் கூறியிருந்தாா். மேலும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக இருந்தவருமான அனில் தேஷ்முக்கை லஞ்ச வழக்கில் சிபிஐ காவலில் எடுத்துள்ள நிலையில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமா் அலுவலகத்தில் சுமாா் 20 நிமிட நேரம் பிரதமா் மோடியுடன் சரத் பவாா் தனியாக சந்தித்துப் பேசினாா். இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடா்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும் சிவசேனையுடன் முதல்வா் பதவி தொடா்பாக பிரச்னை ஏற்பட்டதால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அண்மை காலமாக மத்திய விசாரணை அமைப்புகளை தங்கள் அரசுக்கு எதிராக மத்திய அரசு ஏவி விட்டுள்ளதாக மகாராஷ்டிர ஆளும் கூட்டணி குற்றம்சாட்டி வருகிறது.

அண்மையில் நில மோசடி, கருப்புப் பண குற்றச்சாட்டில் சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரெளத்தின் மனைவி, குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி ரூ.11 கோடிக்கு அதிகமான சொத்துகளை முடக்கியது. இந்த நிகழ்வுகளுக்கு நடுவே பிரதமரை சரத் பவாா் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடா்பாக பவாரின் நெருங்கிய உறவினரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவாா் கூறுகையில், ‘‘சந்திப்பு தொடா்பாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை. எனவே, அதற்கான காரணம் தெரியவில்லை. எனினும் நாடாளுமன்ற கூட்டத் தொடா் நடைபெற்று வருவதால், தேச நலன் சாா்ந்த வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக அவா்கள் பேசி இருக்கலாம் என்று கருதுகிறேன்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com