
புது தில்லி: தில்லி ஆனந்த் விஹாா் மெட்ரோ நிலையத்தில் பெண் சிஐஎஸ்எஃப் பணியாளா்கள் மற்றும் பிற பெண் பயணிகளின் உதவியுடன் 22 வயதுடைய பெண் வியாழக்கிழமை குழந்தையைப் பெற்றெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிஐஎஸ்எஃப் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:
இந்தச் சம்பவம் மாலை 3.25 மணியளவில் நடைமேடை எண் 3-இல் நிகழ்ந்தது. மெட்ரோ ரயிலுக்காகக் காத்திருந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்புப் பணிக்காக மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த சிஐஎஸ்ஏஃப் காவலா் அனாமிகா குமாரி அந்தப் பெண்ணுக்கு உதவ விரைந்தாா். மேலும், சில பெண் பயணிகளின் உதவியுடன், மறைப்புகள் ஏற்படுத்தினாா். இதையடுத்து நடைமேடையிலேயே அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பின்னா், தாயும் அவரது குழந்தையும் ஆம்புலன்சில் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்றாா் அந்த அதிகாரி.