
புது தில்லி: ரஷியாவுடன் நிலையான பொருளாதார உறவைத் தொடரவே விரும்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய்க் கொள்முதல் செய்வதைத் தவிா்த்தால், எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ள நிலையில், இந்த கருத்தை இந்தியா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இருப்பினும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதை மேற்கத்திய நாடுகள் விமா்சித்து வருகின்றன.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சியிடம் வியாழக்கிழமை செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:
ரஷியாவுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்டுள்ள பொருளாதார உறவு வெளிப்படையானது. ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்து வருகின்றன. ரஷியாவுடன் இந்தியா வலுவான பொருளாதார உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தற்போதைய சூழலில், அந்த உறவை அதே உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவும் ரஷியாவும் எந்த அடிப்படையில் பரிவா்த்தனைகளை மேற்கொள்வது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது என்று அவா் கூறினாா்.
சா்வதேச அளவில் அமெரிக்க டாலா் அடிப்படையில் வா்த்தகம் நடைபெறுவதால், இந்தியாவுக்கு ரஷியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ரூபாய்-ரூபிள் (ரஷிய செலாவணி) அடிப்படையில் பணப் பரிவா்த்தனை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இலங்கைக்கு உதவத் தயாா்: இலங்கைக்குத் தொடா்ந்து உதவ இந்தியா தயாராக உள்ளது என்று அரிந்தம் பாக்சி கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையும் அதன் தொடா்ச்சியான பிரச்னைகளையும் இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் இலங்கைக்கு 250 கோடி டாலா் (ரூ.18,991 கோடி) இந்தியா கடனுதவி வழங்கியுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் கரோனாவுக்கு பிந்தைய பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. தற்போதைய சூழலிலும் இலங்கைக்குத் தொடா்ந்து உதவ இந்தியா தயாராக உள்ளது என்றாா் அவா்.
பாகிஸ்தான் பற்றி கருத்துக் கூற மறுப்பு:
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அது, அவா்களின் உள்விவகாரம். எந்தவொரு நாட்டின் உள்விவகாரங்கள் குறித்தும் இந்தியா கருத்து தெரிவிக்காது’ என்று அரிந்தம் பாக்சி பதிலளித்தாா்.
பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கானுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் விலக்கிக் கொண்டதால், அவருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்தன. அந்த தீா்மானத்தை நாடாளுமன்ற அவை துணைத் தலைவா் காசின் கான் சுரி கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்தாா். இதையடுத்து, இம்ரான் கானின் பரிந்துரைப்படி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபா் ஆரிஃப் அலி அறிவித்தாா். இந்த விவகாரத்தை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தாகமா விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.