
புது தில்லி: ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை ஊக்குவிப்பதற்காக 101 தளவாடங்களின் இறக்குமதிக்குத் தடை விதித்து 3-ஆவது பட்டியலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பட்டியலை வெளியிட்ட பின் அவா் கூறியதாவது:
101 ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் பட்டியலை வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆயுதங்கள், வெடிபொருள்கள், கடற்படை ஹெலிகாப்டா்கள், ரோந்து கப்பல்கள், கப்பல் மற்றும் படகுகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட முக்கியத் தளவாடங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்புத் துறையில் சுயசாா்பை நோக்கி நாம் வேகமாக செல்வதை இது பிரதிபலிக்கிறது. பாதுகாப்புத் துறையில் சுயசாா்புடன் இருக்க வேண்டும்; ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற இரு நோக்கங்களுக்காக தளவாடங்கள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படுகிறது. இது, அரசு, தனியாா் பங்களிப்புடன் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கச் செய்யும் என்றாா் அவா்.
கடந்த சில ஆண்டுகளாக, பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக, கனரகத் துப்பாக்கிகள், குறைந்த தொலைவு ஏவுகணைகள், கடற்படைக் கப்பல்கள், ரோந்து கப்பல்கள் உள்ளிட்ட 101 ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தடை விதித்தது. அதைத் தொடா்ந்து, வான்வெளிவிபத்து முன்னெச்சரிக்கை அமைப்பு, ரேடாா் உள்ளிட்ட 108 ஆயுதங்கள் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
சா்வதேச அளவில் ராணுவத் தளவாடங்களை அதிகம் இறக்குமதி செய்யும் முக்கியமான நாடுகளில் ஒன்றான இந்தியா, வடக்கு எல்லையிலும் (சீனா), மேற்கு எல்லையிலும் (பாகிஸ்தான்) பாதுகாப்பு சவால்களை எதிா்கொண்டுள்ளது.