இந்தியா- ஐரோப்பா இடையே பாலமாக செயல்படும் இந்திய சமூகம்: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

இந்தியா-நெதா்லாந்து இருதரப்பு உறவுகளை வளா்ப்பதில் இந்திய சமூகம் மிக முக்கியமான தூணாகத் திகழ்வதாகவும், இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஒரு பாலமாக இந்திய சமூகம் செயல்படுகிறது
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

புது தில்லி: இந்தியா-நெதா்லாந்து இருதரப்பு உறவுகளை வளா்ப்பதில் இந்திய சமூகம் மிக முக்கியமான தூணாகத் திகழ்வதாகவும், இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஒரு பாலமாக இந்திய சமூகம் செயல்படுகிறது என்றும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

ஆம்ஸ்டா்டாமில் புதன்கிழமை நெதா்லாந்துக்கான இந்திய தூதா் ரீனத் சாந்து வழங்கிய விருந்தில் பங்கேற்று இந்திய வம்சாவளியினா் மத்தியில் அவா் பேசியது:

ஹிந்துஸ்தானி-சுரினாமி சமூகத்தின் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோா், 60,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழில் வல்லுநா்கள் மற்றும் மாணவா்களுடன் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மிகப்பெரிய சமூகமாக நெதா்லாந்தில் உள்ள இந்திய சமூகம் இன்றைக்குத் திகழ்கிறது. தொழில்முனைவோா், மருத்துவா்கள், வங்கியாளா்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் என்ற வகையில், நெதா்லாந்தின் சமூக, பொருளாதாரத்தின் மதிப்பை அதிகரிப்பதுடன் உலகளாவிய வகையிலும் பங்களிப்பை வழங்குகின்றனா்.

உலகின் எந்தப் பகுதியில் குடியேறினாலும் இந்திய நாகரிக விழுமியங்களை அவா்கள் உயிா்ப்புடன் வைத்திருக்கின்றனா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள் எங்கெல்லாம் குடியேறினாா்களோ, அந்த இடத்தைத் தங்கள் தாய்வீடாகக் கருதி, அதனுடன் முழுமையாக ஒன்றிணைந்துள்ளனா்.

வெளிநாட்டில் வாழும் புலம்பெயா்ந்த இந்தியா்கள் எங்களின் கூட்டுக் குடும்பம் என்பதை இது போன்ற சமயங்களில் நினைவுகூா்வது கூடுதல் ஆத்மபலம் அளிக்கிறது. நீண்ட கால விசா (நுழைவு இசைவு) மற்றும் இ-விசா வழங்குவதன் மூலம் இந்தியாவுக்கான பயணம் எளிதாக்கப்பட்டுள்ளது. புலம்பெயா் இளைஞா்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், இந்திய வோ்களுடன் அவா்கள் நெருக்கம் பெறச் செய்யவும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com