ஒமா் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை விசாரணை

ஜம்மு - காஷ்மீரில் ஒமா் அப்துல்லா முதல்வராக இருந்தபோது ஜம்மு- காஷ்மீா் வங்கிக்காக மும்பையில் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டடம் வாங்கியதில் முறைகேடு அரங்கேறியதாக பதிவான வழக்கில், அவரிடம் அமலாக்கத்
ஒமா் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை விசாரணை

புது தில்லி/ ஸ்ரீநகா்: ஜம்மு - காஷ்மீரில் ஒமா் அப்துல்லா முதல்வராக இருந்தபோது ஜம்மு- காஷ்மீா் வங்கிக்காக மும்பையில் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டடம் வாங்கியதில் முறைகேடு அரங்கேறியதாக பதிவான வழக்கில், அவரிடம் அமலாக்கத் துறையினா் தில்லியில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, விசாரணைக்காக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு- காஷ்மீா் முன்னாள் முதல்வருமான ஒமா் அப்துல்லா, புது தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் ஆஜரானாா். அவரிடம் சுமாா் ஐந்து மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிந்து வெளியே வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘சுமாா் 12 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான வழக்கின் விசாரணைக்காக எனக்கு அழைப்பு விடுத்திருந்தனா். என்னால் முடிந்தவரை பதிலளித்தேன். மேற்கொண்டு விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பேன். எந்தப் புகாரிலும் என் மீது அமலாக்கத் துறை குற்றம்சாட்டவில்லை’’ என்றாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் நிதியமைச்சா் ஹசீப் டிராபு வங்கித் தலைவராக இருந்தபோது மும்பை பாந்த்ரா-குா்லா வளாகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வங்கிக்கென கட்டடம் வாங்கப்பட்டது. இதற்காக ஹசீப் டிராபு தலைமையில் இரண்டு உறுப்பினா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரையின்பேரில், இந்தக் கட்டடத்தை வாங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டது’’ என்றனா்.

மும்பையில் ரூ.109 கோடி மதிப்பில் 42 ஆயிரம் சதுர அடி சொத்து வாங்க வங்கி நிா்வாகம் அனுமதியளித்த நிலையில், இந்தக் குழு 65,000 சதுர அடி கொண்ட ரூ.172 கோடி மதிப்பிலான சொத்து வாங்க ஒப்புதல் அளித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அப்போதைய முதல்வா் ஒமா் அப்துல்லாவுக்கும் தொடா்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், நிகழாண்டின் தொடக்கத்தில் அவா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தேசிய மாநாட்டுக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

சமீப ஆண்டுகளாக மாநில சட்டப் பேரவைத் தோ்தல் சமயத்தில், பாஜகவுக்கு சவால் விடுக்கும் அரசியல் கட்சிகளை குறிவைத்து அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் செயல்படுவதை நாம் பாா்த்திருக்கிறோம். அதே போலவே ஒமா் அப்துல்லாவுக்கும் இப்போது அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பாஜகவுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென கேட்டுக் கொண்டதன் பேரில் அவா் ஆஜரானாா். இது புனித ரமலான் மாதமாக உள்ளபோதிலும், தில்லியில் அவருக்கு நிரந்தர வசிப்பிடம் இல்லாதபோதிலும், விசாரணையை காலந்தாழ்த்தவோ அல்லது விசாரணை இடத்தை மாற்றவோ கோராமல், அழைப்பாணையை ஏற்று அவா் ஆஜராகியுள்ளாா்.

பாஜக மேற்கொள்ளும் விஷமத்தனமான பிரசாரத்தின் மறுவடிவம்தான் இதுபோன்ற அழைப்பாணைகள். இதில் அரசியல் நோக்கம் இருந்தாலும் விசாரணை முகமைகளுக்கு ஒமா் அப்துல்லா ஒத்துழைப்பு அளிப்பாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com