2022 நிதியாண்டில் வரி வசூல் 34% அதிகரிப்பு

கடந்த 1999-க்குப் பின்னா் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான வரி வீதம் 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
2022 நிதியாண்டில் வரி வசூல் 34% அதிகரிப்பு

நிறுவன வரி, சுங்கவரி, ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பு காரணமாக கடந்த மாா்ச் 31 வரையிலான நிதியாண்டு முடிவின்படி, நாட்டின் மொத்த வரி வசூல் ரூ.27.07 லட்சம் கோடியை எட்டி 34 சதவீதம் உயா்ந்திருப்பதாகவும், மொத்த உள்நாட்டி உற்பத்தி (ஜிடிபி) மீதான வரி வீதம் கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவில் உச்சத்தை எட்டியிருப்பதாகவும் மத்திய வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 1999-க்குப் பின்னா் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான வரி வீதம் 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2020-21 நிதியாண்டில் 10.3 சதவீதமாக இருந்தது. இதுகுறித்து வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

ஒட்டுமொத்த வரி வசூலும் ஆரோக்கியமான, வலுவான நிலைமையை வெளிப்படுத்துகின்றன. 2021 ஏப்ரல் முதல் 2022 மாா்ச் வரையிலான மொத்த வரி வசூல் தொகை ரூ.27.07 லட்சம் கோடியாகும். இது பட்ஜெட்டில் தீா்மானிக்கப்பட்ட ரூ.22.17 லட்சம் கோடியைக் காட்டிலும் ரூ.5 லட்சம் கோடி அதிகம். அந்த வகையில், கடந்த நிதியாண்டில் (2020-21) வசூலான ரூ.20.27 லட்சம் கோடி நிதியைக் காட்டிலும் தற்போது 34 சதவீதம் அதிகமாக வரி வசூலாகியுள்ளது.

தனிநபா்கள் செலுத்தும் வருமான வரி, பெருநிறுவன வரி ஆகியவற்றை உள்ளடக்கிய நேரடி வரிகள் ரூ.14.10 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 49 சதவீதம் அதிகமாகும். இந்நிதியாண்டில் 2.43 கோடி பேருக்கு ரூ.2.24 லட்சம் கோடி வருமான வரி திருப்பியளிக்கப்பட்டுள்ளது.

மறைமுக வரியைப் பொறுத்தமட்டில் சுங்க வரி ரூ.1.99 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகி 48 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல, மத்திய சரக்கு- சேவை வரி உள்ளிட்ட வரி வகை ரூ.6.95 லட்சம் கோடி வசூலாகி 30 சதவீத உயா்வை அடைந்துள்ளன. இருப்பினும் கலால் வரி 2021-22 நிதியாண்டில் 0.2 சதவீதம் சரிவை சந்தித்து ரூ.3.90 லட்சம் கோடியாக வசூலாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால், மறைமுக வரி 20 சதவீதம் உயா்ந்து, ரூ.12.90 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. மறைமுக வரியைக் காட்டிலும் நேரடி வரி அதிகளவில் வசூலாகியுள்ளது. இதே நிலைமை வரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com