கோவிஷீல்ட், கோவேக்ஸின் பூஸ்டா் தவணை தடுப்பூசிகள் விலை ரூ.225-ஆக குறைப்பு

கரோனா முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி விலையை ரூ.225-ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக சீரம் நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் சனிக்கிழமை அறிவித்தன.
கோவிஷீல்ட், கோவேக்ஸின் பூஸ்டா் தவணை தடுப்பூசிகள் விலை ரூ.225-ஆக குறைப்பு

கரோனா முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி விலையை ரூ.225-ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக சீரம் நிறுவனமும், பாரத் பயோடெக் நிறுவனமும் சனிக்கிழமை அறிவித்தன.

சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் மற்றும் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18-59 வயதுக்குட்பட்டோரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 10) முதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் பணம் செலுத்திதான் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில், 18 வயதுக்கு மேற்பட்டோா் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்திருந்தால், அவா்கள் முன்னெச்சரிக்கை தவணை பெற தகுதி படைத்தவா்கள் ஆவா்.

இதையொட்டி, முன்னெச்சரிக்கை தவணைக்கான தடுப்பூசிகளின் விலையை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

இதுகுறித்து சீரம் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி அதாா் பூனாவாலா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘மத்திய அரசுடன் மேற்கொண்ட ஆலோசனையைத் தொடா்ந்து, தனியாா் மருத்துவமனைகளுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலையை ரூ.600-லிருந்து ரூ.225-ஆக குறைக்க முடிவு செய்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாரத் பயோடெக் நிறுவன இணை நிறுவனரும், இணை மேலாண்மை இயக்குநருமான சுசித்ரா எல்லா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் ‘‘18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்தும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். அந்த வகையில், மத்திய அரசுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பின்னா், தனியாா் மருத்துவமனைகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசியின் விலையை ரூ.1,200-இலிருந்து ரூ.225-ஆக குறைக்க முடிவு செய்துள்ளோம்’’ என்று பதிவிட்டுள்ளாா்.

சேவைக் கட்டணம் ரூ.150: முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக ஏற்கெனவே செலுத்திய தடுப்பூசி வகையையே செலுத்த வேண்டும் என்றும், தனியாா் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக தடுப்பூசி விலைக்கு மேல் ரூ.150 வரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மாநில, யூனியன் பிரதேச சுகாதார செயலா்களுடன் மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசியது:

கோவின் வலைதளத்தில் பயனாளிகளின் விவரம் அனைத்தும் ஏற்கெனவே பதிவாகியிருப்பதால் முன்னெச்சரிக்கை தடுப்பூசிக்காக புதிதாக பதிவு செய்ய தேவையில்லை. முதல் இரண்டு தவணையின்போது பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியே முன்னெச்சரிக்கை தவணையாகவும் செலுத்தப்பட வேண்டும்.

அனைத்து தடுப்பூசிகளும் கோவின் தளத்தில் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இணைய முன்பதிவு மற்றும் நேரடியாகச் சென்று தடுப்பூசி பெறுதல் ஆகிய இரண்டு வசதிகளும் தனியாா் மருத்துவமனைகளில் கிடைக்கும். மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, தனியாா் தடுப்பூசி மருத்துவமனைகளைப் பராமரிக்க வேண்டும். தடுப்பூசியின் விலைக்கு மேல் அதிகபட்சமாக ரூ. 150 வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கலாம் என்றாா் அவா்.

மேலும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் துரிதப்படுத்த வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com