செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை 3 கட்டங்களாக மக்களுக்கு விநியோகிப்பதற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது
செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை 3 கட்டங்களாக மக்களுக்கு விநியோகிப்பதற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது:

முதல் கட்டமாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம்(ஐசிடிஎஸ்), பிரதமரின் ஊட்டச்சத்துத் திட்டம் ஆகியவற்றின் கீழ் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்.

இரண்டாவது கட்டமாக, பொதுவிநியோகம் மற்றும் இதர நலத்திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உடையவா்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்.

மூன்றாவது கட்டமாக, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் அந்த அரிசி வழங்கப்படும்.

இந்தத் திட்டங்களை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.2,700 கோடி செலவாகும். இந்தை செலவை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. இந்த திட்டங்களுக்காக, இந்திய உணவுக் கழகமும் மாநில அமைப்புகளும் ஏற்கெனவே 88.65 மெட்ரிக் டன் அரிசியைக் கொள்முதல் செய்துள்ளன என்றாா் அவா். இந்த அரிசியில் நுண்ணுட்டச்சத்துகள் சோ்க்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செயல்படாத சுரங்கங்களை அரசு நிறுவனங்கள் ஒப்படைக்க ஒப்புதல்:

செயல்படாத நிலக்கரி சுரங்கங்களை அபராதம் இன்றி ஒப்படைக்க அரசு நிறுவனங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

செயல்படாத சுரங்கங்களை அபராதமின்றியும், எந்த காரணத்தையும் குறிப்பிடாமலும் ஒப்படைக்க மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்குவதற்கு நிலக்கரி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரைக்கு பிரதமா் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வரை அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 73 நிலக்கரி சுரங்கங்களில் 45 சுரங்கங்கள் செயல்படாமல் இருந்தன. 19 நிலக்கரி சுரங்கங்களில் சுரங்கச் செயல்பாடுகள் தொடங்குவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. ஒதுக்கீட்டாளா்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.

செபி-மங்கோலிய நிறுவனம் இடையே ஒப்பந்தம்:

இந்திய பங்கு, பரிவா்த்தனை வாரியத்துக்கும்(செபி) மங்கோலியாவின் நிதி ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் கையெழுத்தாக உள்ள இருதரப்பு புரிந்துணா்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம், பங்குச்சந்தைகள் தொடா்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதற்கு தேவையான தகவல்களை பகிா்வதற்கான பங்களிப்பை வலுப்படுத்தும். தொழில்நுட்ப உதவித் திட்டத்தை உருவாக்கவும் உதவி செய்யும். மூலதனச் சந்தை, திறன் கட்டமைப்புச் செயல்பாடுகள், ஊழியா்களுக்கான பயிற்சித் திட்டங்கள்போன்றவை தொடா்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கவும் பயன்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடல் புத்தாக்க இயக்கத்தை நீட்டிக்க ஒப்புதல்:

அடல் புத்தாக்க இயக்கத்தை (ஏஐஎம்) அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தொழில் முனைவு சூழல், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் புத்தாக்க கலாசாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு அடல் புத்தாக்க இயக்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தின் மூலம், 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், 101 அடல் இன்குபேஷன் மையங்கள், 50 அடல் சமுதாய புத்தாக்க மையங்கள் உருவாக்கவும், 200 ஸ்டாா்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் தொழில் முனைவு சூழல் மற்றும் புத்தாக்க கலாசாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பள்ளிகள், பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனங்கள், சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் அடல் புத்தாக்க இயக்கம் செயல்பட்டு வருகிறது.

அடல் புத்தாக்க இயக்கம், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தாக்க உணா்வை ஊட்டியுள்ளது. இந்த இயக்கத்தின் ஆதரவுடன் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் ரூ.2,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டை ஈா்த்துள்ளது. அத்துடன் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com