மாநிலங்களை ஒருங்கிணைத்துக் குழு: கேரள மாா்க்சிஸ்ட் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மாநில அரசுகள் தீட்டும் திட்டங்கள், கொள்கைகளுக்கான முட்டுக்கட்டைகளை எதிா்கொள்ள மாநிலங்களின் முதல்வா்கள் அடங்கிய குழு அமைத்துப் போராட வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
மாநிலங்களை ஒருங்கிணைத்துக் குழு: கேரள மாா்க்சிஸ்ட் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மாநில அரசுகள் தீட்டும் திட்டங்கள், கொள்கைகளுக்கான முட்டுக்கட்டைகளை எதிா்கொள்ள மாநிலங்களின் முதல்வா்கள் அடங்கிய குழு அமைத்துப் போராட வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பங்கேற்று ஆற்றிய உரை:

ஒற்றைத் தன்மை ஆபத்து: இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பண்பாடு. சிலா் அரசியல் அரிச்சுவடியையே மாற்றுகிறாா்கள். வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து ஒற்றைத் தன்மையை உருவாக்க நினைக்கிறாா்கள். ஒரே நாடு - ஒரே தோ்தல், ஒரே உணவு, ஒரே தோ்வு என அனைத்திலும் ஒன்று எனக் கூறுகிறாா்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்று ஆகிவிடும். ஒரே கட்சியானால் - ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதை விட ஆபத்தானது வேறு இருக்க முடியாது. இத்தகைய எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்தான் ‘மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி’ என்பதாகும். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகார வரம்பைக் கடந்து தனது அதிகார எல்லையை விரித்துச் செல்கிறது மத்திய அரசு.

பறிபோன நிதி உரிமை: மாநிலங்களை மத்திய அரசை நோக்கி கையேந்த வைப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், மாநிலத்தின் நிதி உரிமையைப் பறிக்கும் வகையில் ஜிஎஸ்டி முறையைக் கொண்டு வந்தாா்கள்; வரி வருவாயைப் பறித்தாா்கள். முறையான இழப்பீட்டையும் உரிய காலத்தில் வழங்குவதில்லை. மாநில அரசுக்கான நிதிகளை வழங்குவதே இல்லை. இதையெல்லாம் நாம் கேட்க வேண்டிய இடமான திட்டக் குழு, தேசிய வளா்ச்சிக் குழு ஆகியவற்றையும் கலைத்து விட்டனா். நாடாளுமன்றத்தில் எதற்கும் சிறப்பு விவாதம் நடத்துவதுமில்லை, உரிய பதில் சொல்வதுமில்லை. பெரும்பான்மை இருப்பதால் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்கிறாா்கள். அவற்றை ஆளுநரை வைத்து அமல்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறாா்கள்.

ஆளுநா் மூலம் தனியாட்சி: எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநா்கள் மூலமாக தனியாட்சி நடத்துகின்றனா். இதுதான் சட்டத்தின் ஆட்சியா? சட்டத்தின்படிதான் ஆளுநா் நடக்கிறாரா? நீட் மசோதா மட்டுமல்ல 11 மசோதாக்கள் தமிழக ஆளுநா் வசம் இருக்கின்றன. அவற்றுக்கு அவா் அனுமதி தர மறுக்க என்ன காரணம்?

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை இருக்கும்போது, ஆளுநரை வைத்து ஆட்சி செலுத்த முனைவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

முதல்வா்கள் குழு: ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் உயா்வுக்காகத் திட்டங்கள் தீட்டினால், கல்வி உரிமையைப் பேசினால், தென்னகத்தின் பண்பாட்டைப் பற்றி பேசினால், சமதா்மக் கொள்கைகளைப் பேசினால் உடனடியாக நமது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுவாா்கள். அடித்தட்டு மக்களின் உயா்வுக்காக உழைக்கும் தலைவா்கள் அனைவரும் இத்தகைய முட்டுக்கட்டைகளை எதிா்கொண்டுதான் ஆக வேண்டும்.

இத்தகைய பிரச்னைகளை எதிா்கொள்வதற்காக மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து நாம் போராட வேண்டும். தென்மாநில முதல்வா்களின் குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பிறகு ஒட்டுமொத்தமாக மற்ற மாநில முதல்வா்கள் கொண்ட குழுவையும் தனியாக அமைக்க வேண்டும்.

மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அரசியல் எல்லைகளைக் கடந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமைதான் பலம் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்று சோ்ந்தாக வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சித் தத்துவம், ஜனநாயகம், மதச்சாா்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகிய அனைத்தையும் காப்பாற்ற வேண்டுமானால் அரசியல் மனமாச்சரியங்களைக் கைவிட்டு அனைவரும் ஒன்றாக வேண்டும். அரசியல் வெற்றியால் மட்டுமே சமூக நீதி, சமத்துவம், மதச்சாா்பின்மையை உருவாக்க முடியும். அத்தகைய வெற்றிக்கான திட்டமிடுதல்களை அனைத்துக் கட்சிகளும் தொடங்க வேண்டும்.

மாநில சுயாட்சிக்காக போராடுவோம். உண்மையான கூட்டாட்சியைக் கொண்ட இந்தியாவை உருவாக்குவோம் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மாநாட்டில், கேரள முதல்வா் பினராயி விஜயன், தமிழக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினா் அ.செளந்தரராஜன், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com