கரோனா முடிந்துவிடவில்லை: பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் தொடர வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

‘உலக அளவில் புதிதாக பரவி வரும் ‘எக்ஸ்இ’ வகை கரோனா திரிபு குறித்த அச்சம் தேவையற்றது’ என்று கூறிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ‘உலகில் கரோனா பாதிப்பு இன்னும் முடிந்துவிடவில்லை
கரோனா முடிந்துவிடவில்லை: பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் தொடர வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

புது தில்லி: ‘உலக அளவில் புதிதாக பரவி வரும் ‘எக்ஸ்இ’ வகை கரோனா திரிபு குறித்த அச்சம் தேவையற்றது’ என்று கூறிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, ‘உலகில் கரோனா பாதிப்பு இன்னும் முடிந்துவிடவில்லை; எனவே பாதுகாப்பு நடைமுறைகளை மக்கள் தொடர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

புதிய வகை ‘எக்ஸ்இ’ தீநுண்மி, ஒமிக்ரானைவிட வேகமாக பரவக் கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், மக்களிடையே கரோனா பாதிப்பு குறித்த அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ வகை, ஒமிக்ரானின் துணை மாறுபாடுகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டின் கலப்பு திரிபுதான். எனவே, இந்த புதிய திரிபு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. நாட்டில் கரோனா நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த பாதிப்பின் நிலவரம் குறித்து மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருவதோடு, மாநிலங்களுக்கும் தொடா் அறிவுரைகளை வழங்கி வருகிறது.

அதே நேரம், உலகில் கரோனா பாதிப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. நாளைய நிலவரத்தை முன்கூட்டி கணிக்க முடியாது. எனவே, தற்காப்பு நடைமுறைகளை மக்கள் தொடர வேண்டும்.

மேலும், கரோனா உயிரிழப்புகளைப் பொருத்தவரை உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மிகக் குறைவுதான். கரோனா உயிரிழப்பின் உலக சராசரி 10 லட்சம் மக்கள்தொகைக்கு 788 உயிரிழப்புகள் என்ற அளவில் இருக்கும் நிலையில், இந்தியாவில் அந்த விகிதம் 380-ஆக பதிவாகியுள்ளது. அதுபோல, கரோனா பாதிப்பு பரவல் விகிதமும் உலக சராசரி 10 லட்சம் மக்கள்தொகையில் 63,458 போ் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் 31,383 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது என்று அவா் கூறினாா்.

கரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிக்கு ரூ.225 என கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா், ‘ரூ. 225 என்பது ஒரு தவணைக்கான அதிகபட்ச விலை. வரும் நாள்களில் தடுப்பூசி உற்பத்தியாளா்களிடையே போட்டி அதிகரிக்கும்போது, இந்த கட்டணம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. மேலும், இந்த முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அரசு மையங்களில் கட்டணமின்றி செலுத்தப்படுகிறது. மற்றவா்கள் தனியாா் மையங்களில் இந்த கட்டணத்துக்கு தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்’ என்றாா்.

மேலும், அரசு மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூறிய அவா், ‘மக்கள்தொகையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ள நபா்களில் 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 85 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். ஒமைக்ரான் அலை பல நாடுகளை கடுமையாக பாதித்த நிலையில், இந்தியாவில் அதன் தீவிரத்தை கட்டுப்படுத்தியதில் தடுப்பூசி திட்டம் முக்கியப் பங்கு வகித்தது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com