கர்நாடகத்தில் வன்முறையாக மாறிய போராட்டம்: 40 பேர் கைது

​காவல் நிலையம் மற்றும் கட்டடங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதற்காக 40-க்கும் மேற்பட்டவர்களை ஹூப்ளி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடகத்தில் வன்முறையாக மாறிய போராட்டம்: 40 பேர் கைது


காவல் நிலையம் மற்றும் கட்டடங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதற்காக 40-க்கும் மேற்பட்டவர்களை ஹூப்ளி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹூப்ளியிலுள்ள ஆனந்த் நகரைச் சேர்ந்த அபிஷேக் ஹயர்மத் என்பவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகைப்படத்தால் சனிக்கிழமை பின்னிரவு பழைய ஹூப்ளி காவல் நிலையம் முன்பு போராட்டம் வெடித்தது. மசூதியுடன் காவிக் கொடி இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவு வைரலானதை தொடர்ந்து முஸ்லிம் அமைப்பு பழைய ஹூப்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தது. காவல் துறையினரும் துரிதமாக செயல்பட்டு குற்றம்சாட்டப்பட்ட ஹயர்மத்தைக் கைது செய்தனர். எனினும், அவரைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு நூற்றுக்கணக்கான மக்கள் காவல் நிலையம் முன்பு குவிந்தனர்.

அங்கு போராட்டமானது வன்முறையாக வெடித்ததைத் தொடர்ந்து, அவர்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் முற்பட்டனர். அவர்கள் காவல் நிலையம், வாகனங்கள், மருத்துவமனை மற்றும் கோயில் மீது பெரிய கற்களை வீசினர். கைது செய்யப்பட்டவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு கூடி காவல் துறையினரிடம் வாக்குவாதம் நடத்தியதைத் தொடர்ந்து, பழைய ஹூப்ளி காவல் நிலையம் முன்பு பதற்றமான சூழல் நிலவியது. இதன்பிறகு, அங்கிருந்த 40 பேரையும் காவல் துறையினர் கைது செய்து வேறு இடத்துக்கு மாற்றினர்.

இதில் 12 காவலர்கள் காயமடைந்துள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹூப்ளி காவல் ஆணையர் லபு ராம் கூறியதாவது:

"இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. யாரும் சட்டத்தைக் கையிலெடுக்கக் கூடாது. பெரிதளவிலான எண்ணிக்கையில் கற்கள் எவ்வாறு சேகரிக்கப்பட்டன என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம். தனியார் வாகனங்கள் சேதப்பட்டுள்ளதாகவும் மக்கள் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. ஏதேனும் புகார் இருந்தால் அதை அருகிலுள்ள காவல் நிலையத்திடம் தெரியப்படுத்த வேண்டும்.

ஹூப்ளி நகர் முழுவதற்கும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக மற்ற மாவட்டங்களிலிருந்து கூடுதல் காவல் படைகள் வந்தடைந்துள்ளன" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com