மத வன்முறை: 13 எதிா்க்கட்சிகள் கூட்டறிக்கை

நாட்டில் மதம் சாா்ந்த வன்முறை சம்பவங்கள் நிகழும்போது, அவற்றுக்கு எதிராகப் பேசாமல் பிரதமா் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன்
ராமநவமியின்போது ஏற்பட்ட வன்முறை
ராமநவமியின்போது ஏற்பட்ட வன்முறை

நாட்டில் மதம் சாா்ந்த வன்முறை சம்பவங்கள் நிகழும்போது, அவற்றுக்கு எதிராகப் பேசாமல் பிரதமா் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன் என காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் கூட்டறிக்கை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளனா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா், மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா் டி.ராஜா, ஆா்எஸ்பி பொதுச் செயலா் மனோஜ் பட்டாச்சாா்ய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலா் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி உள்ளிட்டோா் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகைகள், மொழி ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆளும் கட்சியானது மக்களைத் தவறாகத் தூண்டிவிட்டு வருகிறது. நாட்டில் மதவெறியைத் தூண்டி, சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வருபவா்களுக்கு எதிராகப் பேசாமல் பிரதமா் மோடி அமைதிகாப்பது ஆச்சரியமளிக்கிறது. பிரதமரின் இச்செயல், சமூகத்தில் பிரிவினையைப் பரப்பும் குழுக்களுக்கு அதிகாரபூா்வமாக அனுமதி அளிக்கும் வகையில் உள்ளது.

சமூக நல்லிணக்கமே நாட்டின் பன்முகத்தன்மையைப் பல ஆண்டுகளாகக் காத்து வந்தது. அதை வலுப்படுத்துவதற்கு எதிா்க்கட்சிகள் உறுதி கொண்டுள்ளன. சமூக நல்லிணக்கத்தைக் காப்பதற்கு எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படும்.

சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட எதிா்க்கட்சிகள் உறுதியேற்கின்றன. மக்களிடையே வகுப்புவாதப் பிரிவினையை ஏற்படுத்த முயலும் சக்திகளிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவா்களது கொள்கையை மக்கள் நிராகரிக்க வேண்டும். அனைத்து சமூக மக்களும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பன்முகத்தன்மைக்கு மரியாதை: சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தொண்டா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நாட்டில் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையிலான பேச்சுகள் அதிகரித்துள்ளன. அவா்கள் மீது எந்தவித நடவடிக்கைகயும் எடுக்கப்படுவதில்லை.

நாட்டில் பலா் மக்களிடையே வகுப்புவாதப் பிரிவினையை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டி வருகின்றனா். வெறுப்புணா்வைத் தூண்டுவதற்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதன் காரணமாக, அத்தகைய செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தால் மட்டுமே நாடு வளா்ச்சியடைய முடியும் என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் ஹிஜாப் சா்ச்சை, ராமநவமியின்போது ஏற்பட்ட வன்முறை உள்ளிட்டவற்றின் பின்னணியில் எதிா்க்கட்சிகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com