தமிழ்நாட்டில் போட்டித்தேர்வை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்பது நியாயம் அல்ல: அன்புமணி

தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒரு போட்டித்தேர்வின் முதல் தாளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல
அன்புமணி ராமதாஸ் (கோப்புப் படம்)
அன்புமணி ராமதாஸ் (கோப்புப் படம்)

   
சென்னை: தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒரு போட்டித்தேர்வின் முதல் தாளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒரு போட்டித்தேர்வின் முதல் தாளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

அதுமட்டுமின்றி, குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய 5 பாடங்களில் இளநிலைப்பட்டம் பெற்றவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 

சட்டம், மருத்துவம், பொறியியல், வனம் போன்ற குறிப்பிட்ட நிபுணத்துவம் தேவைப்படும் பணிகளுக்கு மட்டுமே அவை சார்ந்த பாடங்களை படித்திருப்பது கட்டாயத்தகுதியாக அறிவிக்கப்படும். குழந்தை பாதுகாப்பு என்பது குடிமைப்பணிகளில் ஒன்று தான்.

எந்தவொரு இளநிலைப் படிப்பையும் படித்து, குழந்தை பாதுகாப்பு குறித்த வி‌ஷயங்களில் பயிற்சியை பெற்றுக்கொண்டால் இந்த பணியை சிறப்பாக செய்ய முடியும். இந்தியாவின் மிக உயர்ந்த நிர்வாகப்பணியாக கருதப்படும் குடிமைப்பணிகளுக்குக் கூட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தான் கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிமைப்பணி அதிகாரிகள் குழந்தை பாதுகாப்பு தொடர்பான வி‌ஷயங்களை சிறப்பாக கையாளுகின்றனர். அதனால் குறிப்பிட்ட 5 படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது அநீதியாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் நோக்கங்களை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும். தமிழக அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணான வகையில் செயல்படுவது தவறு ஆகும்.

இதை உணர்ந்து குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித்தேர்வுக்கு ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அப்பணிக்கான போட்டித்தேர்வின் முதல் தாள் வழக்கம் போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று அறிவிப்பதுடன், அதற்கேற்ற வகையில் கூடுதல் அவகாசத்துடன் திருத்தப்பட்ட அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com