உடான் திட்டத்தின் கீழ் மும்பை- குஜராத்தின் கேஷோத் இடையே விமான சேவை தொடக்கம்

‘உடான்’ திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலம், கேஷோத்தில் இருந்து மும்பைக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உடான் திட்டத்தின் கீழ் மும்பை- குஜராத்தின் கேஷோத் இடையே விமான சேவை தொடக்கம்

‘உடான்’ திட்டத்தின் கீழ் குஜராத் மாநிலம், கேஷோத்தில் இருந்து மும்பைக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

குஜராத் மாநிலம், ஜுனாகத் மாவட்டத்தில் உள் கேஷோத் விமான நிலையத்தில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை விமான சேவை தொடங்கப்பட்டது.

கேஷோத் விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் மற்றும் மாநில அமைச்சா்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தற்போது, கேஷோத்தில் இருந்து மும்பைக்கு சாலை வழியாகச் செல்வதற்கு 16 மணி நேரமாகிறது. விமானப் பயணத்தின் மூலம் ஒன்றரை மணி நேரத்தில் சென்று விட முடியும். இந்த வழித்தடம், அலையன்ஸ் விமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்துக்கு 3 நாள்கள் விமானங்கள் இயக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:

தற்போது தொடங்கப்பட்டுள்ள புதிய விமான சேவை, நமது தேசப்பிதா மகாத்மா காந்திக்கு பிடித்த இடமான கேஷோத்தை நாட்டின் நிதித் தலைநகருடன் இணைப்பதாக உளளது. உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களான சோம்நாத் கோயில், கிா் தேசிய சரணாலயம் ஆகியவை கேஷோத் நகருக்கு அருகே அமைந்துள்ளன.

புதிய வழித்தடத்தில் விமான சேவைகள் இயக்கப்படுவதால் மூலம் சுற்றுலாப் பயணிகள் எளிதில் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவை தவிர, கேஷோதில் அமைந்துள்ள ஜவுளி, ரசாயனங்கள், சிமென்ட் போன்ற பல்வேறு தொழிற்சாலைகளும் இந்த புதிய விமான சேவையின் மூலம் பயனடையும்.

ஹிராசா் மற்றும் தோலேராவில் 2 புதிய விமான நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 2 விமான நிலையங்களும் முறையே ரூ.1,405 கோடி மற்றும் ரூ.1,305 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளன. போா்பந்தா் மற்றும் தில்லியை இணைக்கும் சிறப்பு வழித்தடம் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி செயல்படத் தொடங்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com