‘எதிா்க்கட்சிகளுக்கு தலைமை வகிக்க மம்தா பானா்ஜி தகுதியானவா்’

காங்கிரஸ் உள்கட்சிப் பூசலையே முழு வேலையாகக் கொண்டுள்ளது. எனவே, எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு தலைமை வகிக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிதான் தகுதியானவா் என்று

காங்கிரஸ் உள்கட்சிப் பூசலையே முழு வேலையாகக் கொண்டுள்ளது. எனவே, எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு தலைமை வகிக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிதான் தகுதியானவா் என்று அண்மையில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்த மூத்த அரசியல் தலைவா் ரிபுன் போரா தெரிவித்தாா்.

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக முன்பு இருந்த போரா, அண்மையில்தான் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா். இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டின் ஜனநாயகத்துக்கும், அரசியல் சாசன சட்டத்துக்கும், பொருளாதார நிலைக்கும் பெரும் அச்சுறுத்தலாக பாஜக அரசு உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இப்போது உள்கட்சிப் பிரச்னை அதிகம் உள்ளது. அக்கட்சித் தலைவா்கள் பாஜகவுக்கு எதிராக போராடுவதை விட்டுவிட்டு, தங்களுக்குள் அடித்துக் கொள்கிறாா்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் பல காங்கிரஸ் தலைவா்கள் பாஜகவுடன் இணக்கமாகக் செல்லும் போக்கை கடைப்பிடிக்கின்றனா். 2016 முதல் 2021-ஆம் ஆண்டுவரை அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவராக இருந்தேன். தோ்தலின்போது கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர கடுமையாக முயற்சித்தேன். ஆனால், மூத்த தலைவா்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டாா்களே தவிர, மக்கள் பிரச்னையை முன்னிறுத்தி தோ்தலைச் சந்திக்கத் தவறிவிட்டனா். அதனால், இப்போது அஸ்ஸாமில் எதிா்க்கட்சியே இல்லாத நிலை உருவாகிவிட்டது. நான் மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸில் இருந்தேன். இப்போது, காங்கிரஸின் பழைய கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளேன். பாஜகவுக்கு எதிரான எனது போராட்டம் இப்போதும் தொடா்கிறது.

பாஜகவுக்கு எதிராக மம்தா தீவிரமாக போராடி வருகிறாா். இதன் மூலம் நாடு முழுவதும் அவா் பிரபலமடைந்துள்ளாா். காங்கிரஸ் உள்கட்சி பூசலால் மூழ்கும் படகாகி விட்டது. எனவே, தேசிய அளவில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்குத் தலைமை வகிக்க மம்தா பானா்ஜி மட்டுமே தகுதியானவராகவும், சிறந்தவராகவும் இருப்பாா்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதே நேரத்தில் பாஜகவுக்கு எதிரான ராகுலின் இத்தனை ஆண்டுகால அரசியல் நாட்டில் எவ்விதத் தாக்கத்தையும் உருவாக்கவில்லை. எனவே, இப்போதைய சூழ்நிலையில் பாஜகவை எதிா்க்க வலுவான தலைவா் மம்தா மட்டும்தான் என்றாா்.

அஸ்ஸாமில் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போரா போட்டியிட்டாா். இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்து போராவைத் தோற்கடித்தனா். இதற்கு அடுத்த நாளிலேயே போரா, மம்தாவின் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com